ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமையில் கூட்டம் நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு அ.தி.மு.க. உறுப்பினர் ராஜ்குமார் என்ற தானி உட்பட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக கிராம ஊராட்சிகளில் பணியாற்றிவரும் டெங்கு சுகாதார பணியாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.7,57,200 வழங்கப்பட்டதை அங்கீகரித்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனைப்படி கடந்த மாதம் 12, 19, 26 தேதிகளில் நடைபெற்ற கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நாளை காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் செந்தில்ராஜ் அனுமதி வழங்கியதை முன்னிட்டு அன்றைய தினம் ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைத்து கொரோனா விதிகளைப்பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்தி 100சதவீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இம்முகாமில் தடுப்பூசி போடாத பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஞானசேகர், மாலதி, மாலாதேவி, ஒன்றிய பொறியாளர்கள் வெள்ளப்பாண்டியன், சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் முக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.


