கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் வெள்ளக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்த பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.
வருகின்ற மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்த பேரிடர் பயிற்சி ஒத்திகை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி கலால் உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சென்னையில் இருந்து வருகை தந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு கமாண்டர் பிரிட்டம் சிங் ஒத்திகைப்பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஒத்திகைப்பயிற்சியில் கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் தவறி விழும் நபர்களை மீட்கும் பயிற்சியை ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத்துறை ஆய்வாளர் இசக்கி தலைமையில் தீயணைப்புத் துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்தனர். பின்னர் அவர்களை காப்பாற்றி கரையேற்றி பின்னர் அவர்களுக்கு முதலுதவி வழங்கினர். தொடர்ந்து அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் சின்னத்துரை, பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் பொன்ராஜ், வல்லநாடு அரசு மருத்துவர் சுந்தரி, வல்லநாடு சுகாதார ஆய்வாளர் ஜாகீர், கருங்குளம் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அருணா, உதவியாளர் அனந்தபத்மநாபன், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் விஜயராணி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊரக உள்ளாட்சித்துறையினர், மருத்துவத்துறையினர், போக்குவரத்து துறையினர், மின்வாரியத்துறையினர், நீர் வளத்துறையினர், குடிநீர்வாரித்துறையினர் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவைகள் குறித்து பேசினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


