தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் ஐகோர்ட் பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது திருவுருவப் படத் திறப்பு விழா மற்றும் இரங்கல் கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சாத்தான்குளம் பறையர் ஜமீன்தார் குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தேரிக்காட்டு ஜமீன்தார்கள் என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஐகோர்ட் பாண்டியன் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசுகையில்,
கடவுளை மறுப்பவர்கள் சாத்தான்கள் என கிறிஸ்தவ மதத்தில் சொல்வதுண்டு. இதன்படி கௌதம புத்தரையே சாத்தான் என சொல்பவர்கள் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்குமே சாதிப்பெயர்கள் கிடையாது. தமிழன் என்பதற்கான அடையாளம் நிரந்தரமானது. சாதிகளுக்கான அடையாளம் நிரந்தரமாக கூடாது. சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்பது அம்பேத்கர் கனவாக இருந்தது. இந்தியாவிலேயே சாதி ஒழிப்பை கொள்கையாகக் கொண்டுள்ள ஒரே அரசியல் இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில்,
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவி மரணத்திற்கு எது காரணமாக இருந்தாலும் உண்மை நிலை வெளிவர வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும். அவரது குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் 8 ஆண்டுகள் ஆட்சியை இதுவரை இந்திய தேசம் சந்தித்ததில்லை. இந்திய பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சரிந்து இருக்கிறது. மக்களிடையே இருந்த நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. ஜாதி அடிப்படையில் மத அடிப்படையில் மக்கள் பிரிந்து இருக்கின்றனர். ஆணவக் கொலைகள் அதிகரித்து இருக்கிறது. மோடி தலைமையிலான இந்த 8 ஆண்டுகள் ஆட்சி அதானி அம்பானி ஆகியோரது நலன்களை பாதுகாக்கின்ற ஆட்சி உழைக்கின்ற மக்களுக்கு எதிரான ஆட்சியாக உள்ளது.


