தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சகாயமாதா பங்கு மக்கள் சார்பில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு 440ஆவது திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், திருவிழாவின் ஆறாம் நாளான இன்று லயன்ஸ் டவுன் சகாயமாதா பங்கு மக்கள் நவநாள் திருப்பலி பங்குதந்தை பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆக்ஸ்ட் 5-ம் தேதி அன்னையின் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற இந்த திருவிழாவில் இந்த ஆண்டு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தினர் மற்றும் வெளி நாடு என லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஆக.5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் 1000 போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


