தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலகு 218 சார்பில், “விக்சித் பாரத் யுவா கனெக்ட் – நஷா முக்த் பாரத்” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், சென்னை பிராந்திய நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக NSS இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தன. கல்லூரி பொறுப்பு முதல்வர் செந்தில் தலைமை வகித்து, ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க மாணவர்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
NSS நோடல் அலுவலர் கருப்பசாமி வரவேற்புரையாற்றி, திட்டத்தின் நோக்கங்களை விளக்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக NSS ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் சிறப்புரையாற்றி, 2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தினார். துணை முதல்வர் அருணாச்சல ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அலுவலர் ஞான சந்திரன் மாணவர்களுக்கு ‘மை பாரத்’ இணையதளப் பதிவு குறித்து விளக்கியதைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்க ‘விக்சித் பாரத்’ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர் ஈஸ்வர் சேஷு போட்லா ‘யூத் ஐகான்’ எனும் தலைப்பில் தலைமைத்துவப் பண்புகள் குறித்து பவர்பாயிண்ட் வழியே விளக்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக NSS தன்னார்வலர் பனிமலர் நன்றி கூற, இரண்டாம் ஆண்டு MBA மாணவி அக்ஷ்யா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதில் திரளான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.


