தூத்துக்குடி மேலசண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் வண்ணார் 3-வது தெரு தொடர்ச்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடைவிழா கடந்த ஜூன் 23-ஆம் தேதி கால்நட்டு விழாவுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினசரி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இரவு நேரங்களில் ஆன்மீகச் சொற்பொழிவு, அம்மன் கும்மிப்பாட்டு மற்றும் வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான எட்டாம் நாள் கொடைவிழாவை முன்னிட்டு காலையில் கன்னி விநாயகர் கோவிலில் இருந்து அக்னிச்சட்டி மற்றும் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கோவிலைச் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மதிய கொடைபூஜை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பொது அன்னதானத் திட்டத்தைத் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என். பி. ஜெகன் பெரியசாமி முறைப்படி தொடங்கி வைத்தார்.
மாலை வேளையில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு விழாவின் உச்சகட்டமாக 101 பெண்கள் முளைப்பாரி ஏந்தியும், 504 பெண்கள் மாவிளக்கு தட்டுகளை ஏந்தியும் நகரின் முக்கிய தெருக்களின் வழியாகப் பக்திப் பாடல்களுடன் ஊர்வலமாக வந்தனர். நள்ளிரவில் சாமக்கொடை பூசைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவரும் தர்மகர்த்தாவுமான கோட்டுராஜா, பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், செயலாளர்கள் ஞானராஜ், செல்வராஜ், பொன்ராஜ், மாரி செல்வ ஈஸ்வரன், துணைத்தலைவர்கள் பொன்ராஜ், பிரபு, தாமஸ், குமாரவேல், கண்ணன், துணைச்செயலாளர்கள் முருகேசன், கனகமாரியப்பன், சதீஷ்குமார், மனோராஜ், ராஜசேகர், பொருளாளர் பழனிக்குமார் மற்றும் கௌரவ ஆலோசகர்கள் செல்வராஜ், விஜயராகவன் ஆகியோர் தலைமையிலான நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


