தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில், பிறவியிலேயே இடது கண் இல்லாமல் பிறந்த 9 வயதுச் சிறுமிக்கு அரிதான கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில், துறைத் தலைவர் உட்பட நான்கு மருத்துவர்கள், பதினைந்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
இத்துறையில் ஒவ்வொரு மாதமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கண் புரை அறுவைச் சிகிச்சைகள் தங்குதடையின்றி செய்யப்படுகின்றன. மேலும் கண் நீர் அழுத்த நோய், மாறுகண், கண் நீர் பை அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் கண் குழி அறுவை சிகிச்சைகள் போன்ற அதிநவீன சிகிச்சைகளும் இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பொன்னு என்பவரின் மகள் முத்துசெல்வி (9). இக்குழந்தை பிறவியிலேயே இடது கண் இல்லாமல் பிறந்துள்ளது. இச்சிறுமிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன் மற்றும் இருப்பிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோரின் உத்தரவின் பேரில், கடந்த ஜூன் 20 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டது.
கண் பிரிவு துறைத் தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளருமான டாக்டர் ரீட்டா ஹெப்சிராணி தலைமையில், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் அருணா தேவி, மயக்கவியல் மருத்துவர் ஸ்ரீராம் மற்றும் மருத்துவர்கள் அஜய் சந்தோஷ் டேவிட், ஜெயந்தி, வின்சா, திவ்யா, செவிலியர்கள் சுரேகா, ரத்னா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இச்சிறுமிக்குக் கண் குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண் பொருத்தும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
மிகவும் அரிதாகச் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், “பிறவியிலேயே கண் பார்வை இல்லாத ஒருவருக்கு முழுமையான பார்வைத் திறனை மீட்டுத் தருவது மருத்துவ ரீதியாக 100 சதவீதம் சாத்தியமற்றது. எனினும், இந்த அதிநவீன சீரமைப்பு அறுவை சிகிச்சையின் மூலம், அந்தச் சிறுமிக்கு இயற்கையாகவே கண் இருப்பது போன்ற தோற்றம் தற்போதும், வருங்காலத்திலும் முழுமையாக உண்டாகும். இதன்மூலம் முகத்தில் இருந்த பிறவிக்குறைபாடு மறைந்து, சமூகத்தில் அந்தச் சிறுமிக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் தடுத்து, நல்வாழ்வு வாழ வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
இந்த அரிய சாதனையை நிகழ்த்திய கண் மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியர்களும், மருத்துவர்களும், செவிலியர்களும் நேரில் பாராட்டினர். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அனைத்து விதமான நோய்களுக்கும் அரசு மருத்துவர்களை நாடி உரிய பலன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


