தூத்துக்குடியில் போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கு மற்றும் சிப்காட் கொலை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றிய காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) இரா. திருநாவுக்கரசு நேரில் வரவழைத்துப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில், குற்றவாளிக்குச் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தருவதற்காகத் தீவிரமாகப் பணியாற்றிய அப்போதைய புலனாய்வு அதிகாரியும், தற்போதைய அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளருமான வனிதா மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சமுத்திரகனி ஆகியோரின் சட்டப் பணிகளைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி சிப்காட் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் தகுந்த சிறை தண்டனையும் அபராதமும் பெற்றுத் தந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், நீதிமன்ற தலைமை காவலர்கள் சிவனேசமாணிக்கம் மற்றும் இளையராஜா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
பாராட்டுக்குரிய இந்த அதிகாரிகள் அனைவரையும் திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு நேற்று (01.07.2026) நேரில் வரவழைத்த காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, அவர்களின் நேர்மையான மற்றும் துரிதமான புலனாய்வுத் திறனைப் பாராட்டி தலா ஒரு நற்சான்றிதழ் வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


