
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நடப்பு பிசான பருவத்தில் பேரூர், ஸ்ரீவைகுண்டம், சிவகளை, ஆயத்துறை, திருப்புளியங்குடி கிராமங்களில் பெருமளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் சில இடங்களில் இலைகள் பழுத்து திட்டு திட்டாக காய்ந்து வருகிறது.
இதனை ஆய்வு மேற்கொள்வதற்காக தூத்துக்குடி வேளாண் இணை இயக்குனர் முகைதீன் ஆலோசனையின்படி அட்மா திட்டத்தின் கீழ் விரிவாக்க பணியாளர்கள் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இன்றைய தினம் கூட்டு பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது பாதிக்கப்பட்ட வயல்களில் சத்து குறைபாடு மற்றும் போதிய வடிகால் வசதி இல்லாத பயிர்கள் பாதிப்படைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வயல்களில் நீர் வெளியேறுமாறு வடிகால் வசதியை ஏற்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இலை வழி தெளிப்பான் 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் வீதம் மற்றும் நீரில் கரையும் துத்தநாக சல்பேட் 50 கிராம் என்ற அளவில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் நெற்பயிரில் முழுவதும் நனையும்படி 10 நாட்களுக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் சத்துக் குறைபாட்டைப் போக்கி அதிக மகசூல் ஏறுமாறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொறுப்பு அல்லிராணி கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் துறை பேராசிரியர் ஜோதிமணி நோயியல் துறை பேராசிரியர் பரமசிவம் துணை வேளாண் அலுவலர் சிவக்குமார் உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வப்ரபு உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி ராஜூ முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.