திருச்செந்தூர் பாலக்காடு ரயில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனாவால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று சென்றது. கொரோனா காலத்திற்கு பிறகு இந்த ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது. ஆனால் செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படவில்லை.
இதுகுறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வந்தனர் செய்துங்கநல்லூர் மக்கள் . ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
திட்டமிட்டே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இந்த மூன்று ரயில் நிலையங்களையும் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது. ஆனால் இங்கு பாஸஞ்சர் ரயிலாக இயங்கி வந்த திருச்செந்தூர் திருநெல்வேலி ரயிலும் விரைவு ரயிலாக இயக்கப்பட்டும் செய்துங்கநல்லூர் தாதன்குளம் ஸ்ரீவைகுண்டத்தில் நின்று செல்கிறது. திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
ஆனால் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் மட்டும் திட்டமிட்டே நிறுத்தப்படவில்லை. மிகப்பெரிய ரயில் நிலையங்களாக ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்கள் இருந்தும் கூட திட்டமிட்டே இந்த ரயில்நிலையங்களை புறக்கணித்து வருகின்றனர் . இதே நேரத்தில் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் போக்குவரத்தினை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டுமே புறக்கணிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 16 ந்தேதி இயக்கப்பட்ட இந்த ரயில் கடந்த 24.12.2021 முதல் கேரள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வட்டார பொதுமக்கள் தொடர் முயற்சியால் ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ரயில்வேயில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்கள் பகுதியில் மட்டும் இதே ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடர் கோரிக்கை வைத்தும் அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம், செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பொதுமக்களை திரட்டி பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், தொழில் வர்த்தக சங்க தலைவர் அய்யாக்குட்டி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி முதல் போராட்டமாக செய்துங்கநல்லூர் போஸ்ட் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 25 ந்தேதி நடந்தது. ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் தான் சம்பந்தப்படட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன். இல்லையென்றால் நானும் உங்களது தொடர் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன் என்று பேசினார்.
இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 1ம் தேதி தபால் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டமும், மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி செய்துங்கநல்லூரில் அனைத்து கடைகளும் அடைத்து கடையடைப்பு போராட்டமும், நான்காம் கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டமும், ஐந்தாம் கட்டமாக பிப்ரவரி 22ம் தேதி செய்துங்கநல்லூரில் பொதுமக்களை திரட்டி ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து அலுவலகம், மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த காரணத்தினால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசஷ் செய்துங்கநல்லூர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில் இரண்டாவது போராட்டமான தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த படும் என போராட்ட காரர்கள் அறிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் தபால் நிலையம் முன்பு ஏரளமான போலிஸ் குவிக்கப்பட்டது. இதற்கிடையில் டி.எஸ்.பி வெங்கடேஷ், போராட்டகுழுவினருடன் பேசி 10பேர்களை அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அழைத்தார்.
இதனால் செய்துங்கநல்லூர் கிராம மக்கள் தலைவர் பார்வதி நாதன் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போரட்டத்தினை கைவிடுவதாக அறிவித்தார். அதன் பின் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. செய்துங்கநல்லூர் ஊர் சார்பாக பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வார்டு உறுப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சங்கத்தினை சேர்ந்த பட்டுராஜா, தவ்கீத் ஜமாத்தை சேர்ந்த அப்துல் கனி, தி.மு.க கருங்குளம் ஒன்றிய இளைரணி அமைப்பாளர் ஜிந்தா சேக் அப்பாஸ், சமூக சேவகர் சாகுல் ஹமீது, சந்தையடியூர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர் தற்போது தேர்தல் நேரம் இந்த வேளையில் போராட்டம் நடத்துவது சரியல்ல. மேலும் சம்பந்தபட்ட ரயில்வே அதிகாரிகளுடன் நான் பேசி செய்துங்கநல்லூர் உள்பட மூன்று இடங்களில் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுககிறேன் என்று கூறினார்.
அதன் பிறகு செய்துங்கநல்லூர் மக்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கும், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பிக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதனால் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து தேர்தல் முடிந்தவுடன் செய்துங்கநல்லூர் உள்பட மூன்று இடங்களில் பாலக்காடு திருச்செந்தூர் ரயில் நின்று செல்லும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.