இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! இந்த 2026ம் ஆண்டு, உங்களுக்கு மிகுந்த ஒரு ஆசீர்வாதத்தின் ஆண்டாகவே இருக்கும்! விசுவாசியுங்கள்! ஏனென்றால், ஆசீர்வதிக்கிற இயேசு கிறிஸ்து உங்களோடு கூட இருக்கிறார்!
“கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தம் எனக்குரியது!” என்று விசுவாசித்து நீங்கள் ஜெபித்தால், அந்த வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதத்தை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.கேளுங்கள், அப்பொழுது கொடுக்கப்படும்
கர்த்தர் உங்களை பார்த்து, “என் மகனே/மகளே, நீ என்னிடத்தில் கேட்டால், அதை நான் உனக்கு கொடுப்பேன்!” என்று வாக்குக் கொடுக்கிறார்.
கர்த்தர் தம்முடைய கரங்களில் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொடுக்க ஆயத்தமாகவேதான் இருக்கிறார். ஆனால், உங்களுக்குரிய ஆசீர்வாதங்களை நீங்கள் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
“கேளுங்கள். அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்;…” என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார். அதாவது, “என் மக(னே)ளே, நீ கேட்கும்போது நான் உனக்கு தருவேன்!” என்று கர்த்தர் சொல்கிறார். ஆகவே நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.
“என் [இயேசு கிறிஸ்துவின்] நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” (யோவான் 14:14) என்றும், “…. நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்…” (மத்தேயு 21:22] என்றும் கர்த்தர் நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்.
எனவே, நீங்கள் என்ன காரியத்திற்காக வேண்டிக் கொண்டாலும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, அவரிடத்தில் விசுவாசத்தோடு கேளுங்கள். அப்பொழுது ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வீர்கள்.
பர்திமேயு (பார்வையற்றவர்): இயேசு கிறிஸ்துவிடம், “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்று கேட்டபோது, அவர் அற்புதம் செய்து, தெளிவான கண் பார்வையை கொடுத்தார் (மாற்கு 10:46-52).
இரண்டு பார்வையற்ற மனிதர்கள்: இயேசுவிடம், “எங்களுக்கு இரங்கும்!” என்று கேட்டார்கள். “அதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று அவர் கேட்க, அவர்கள் “ஆம் ஆண்டவரே, விசுவாசிக்கிறோம்!” என்று சொன்னவுடனே, அவர் அவர்களுக்கு தெளிவான கண் பார்வையை கொடுத்தார் (மத்தேயு 9:27-30).
தொழுநோயாளன்: இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்து, “ஆண்டவரே, உமக்கு சித்தமானால் என்னை சுகமாக்க உம்மால் முடியும்!” என்று சொன்னபோது, அவன் அற்புதமான சுகத்தைப் பெற்றுக் கொண்டான் (மத்தேயு 8:2,3).
நூற்றுக்கு அதிபதி: தன் வேலைக்காரனுடைய சுகத்திற்காக இயேசுவிடம் வேண்டிக் கேட்டபோது, அவர் அவனுடைய விசுவாசத்தைப் பார்த்து, வேலைக்காரனை சுகமாக்கினார் (மத்தேயு 8:5-13).
கானானிய ஸ்திரீ: தன் மகள் பிசாசின் பிடியினால் வேதனைப்படுவதற்காக இயேசுவிடம் கேட்டபோது, அவர் அவளுடைய விசுவாசத்தைப் பார்த்து, மகளுக்குப் பூரணமான விடுதலையை கொடுத்தார் (மத்தேயு 15:22-28).
பிசாசின் ஆவியினால் பாதிக்கப்பட்ட மகனின் தகப்பன்: இயேசு கிறிஸ்துவினிடத்தில் கேட்டபோது, மகனுக்கு நிரந்தரமான ஒரு விடுதலையை கொடுத்தார் (மத்தேயு 17:14-18).
அதேபோல நீங்களும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, விசுவாசத்தோடு அவரிடத்தில் கேட்கும்போது, எந்தவொரு காரியமானாலும் உங்களால் அதை பெற்றுக் கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அற்புதம் நடக்கப் போகிறது!
உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் கேளுங்கள். நீங்கள் அற்புதத்தைப் பெற்றுக் கொள்பீர்கள்! கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கும் அதிசயங்களை செய்யப் போகிறார்! ஏனென்றால், “…. கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்ளுகிறான்;…” என்றுதான் இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்.
நீங்கள் எந்த இனம்? எந்த ஜாதி? எந்த மதம்? உங்களுடைய குடும்பப் பின்னணி என்ன? என்றெல்லாம் அவர் எதையுமே பார்க்க மாட்டார். உங்களுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்கிறதா? என்பதைப் பார்த்துத்தான் கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்வார். ஆகவே, விசுவாசத்தோடு கர்த்தரிடத்தில் கேளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும்!
சகோ.மோகன் சி. லாசரஸ், ‘இயேசு விடுவிக்கிறார்’.


