தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, அங்குள்ள மருத்துவ பயனாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் வருகின்ற மருத்துவ பயனாளிகளை தெரிந்துக் கொண்டு, எவ்விதம் தயார் நிலையில் இருப்பீர்கள்? அங்குள்ள கட்டில்கள் மற்றும் விரிப்புகள் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதா? எப்பொழுது மாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார்கள். இருதயவியல் பிரிவில் ஆய்வு செய்து, ஆஞ்சியோகிராம் செய்த மருத்துவபயனாளிகளை சந்தித்து உரையாற்றினார்.
பின்னர், துத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரண்டு கட்டடங்கள் உபயோகமின்றியும் மற்றும் சிதலமடைந்து காணப்பட்ட இரண்டு வார்டுகளையும் பார்வையிட்டு, அதனை இடித்து அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், பெண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கட்டிடங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன்பிறகு, மருத்துவமனையின் சமையலறையை ஆய்வு செய்து, அங்கு நோயாளிகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவினை உண்டு, உணவின் தரம் மற்றும் சுவை நன்றாக உள்ளது என தெரிவித்தார். மேலும், அரிசி, பருப்பு போன்ற பொருட்களை ஆய்வு மேற்கொண்டு, பொருட்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகளை வழங்க ஆலோசனை வழங்கினார். பிஎம்ஜேவிகே திட்டத்தின் கீழ் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மாற்றம் செய்யப்படும் மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் பிரிவு ஆகிய துறைத் தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்கள்.பொதுப்பணித்துறையினர் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவபயனாளிகளை நன்றாக கவனிக்கவும், கட்டிடங்களை சரியான முறையில் பராமரிக்கவும் மருத்துவர்கள் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முதல்வர் மரு.சிவக்குமார், உண்டு உறைவிட மருத்துவர் மரு. சைலேஸ் ஜெபமணி, மருத்துவ அலுவலர் மரு. சிவசைலம், பொதுப்பணித்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.


