செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கலியாவூர் அருகே உழக்குடி கிராமம் உள்ளது. உழவர் குடி என்ற பெயர் மருவி உழக்குடி என்றானது. இப்பகுதியில் கல் சக்கரங்கள், இரும்பு உருக்கு உலை போன்ற பல வித பொருள்கள் கிடைத்துள்ளன. நெடு கற்கள் இங்கு கண்டறியப்பட்டன. இவ்வித கற்கள் பிரான்சு ஸ்வீடன், அயர்லாந்து, தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்துள்ளன. நெடுங்கற்கள் ஒரு சில இடங்களில் கிடைக்கும். அதில் உழக்குடியும் ஒன்றாகும். உழக்குடி தொல்லியல் களமான ஆதிச்சநல்லூர், சிவகளை , கொற்கை மற்றும் தாமிரபரணி படுகையில் உள்ளது. எனவே உழக்குடி கிராமத்தினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, அகழாய்வு மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த மாதம் 25 ந்தேதி விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர் மத்திய மாநில அரசுகளில் தொல்லியல் துறை அதிகாரிகள் உழக்குடி கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணை யை பிப்பரவரி 17 க்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில் தொல்லியல் துறை முதன்மைச்செயலாளர் உதயச்சந்திரன் மனுதாரரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பதில் மனு ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
தூத்துக்குடியில் இருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள கலியாவூர் பஞ்சாயத்து உழக்குடி என்ற கிராம மலைப்பகுதிகளில் துறையின் மூலமாக உரிய அலுவலர்களை அனுப்பி அகழாய்வு செய்து அகழாய்வு அறிக்கையினை வெளியிடுமாறு கோரியுள்ளீர்கள். ஏற்கனவே தொல்லியல் துறையின் இரண்டு தொல்லியல் அலுவலர்களால் மேற்படி இடத்தில் கடந்த 14.06.2020அன்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான உரிய மேல் நடவடிக்கைகள் துறையின் மூலமாக பரிசீலிக்கப் பட்டுவருகிறது என்பது தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று பதில் கூறியிருந்தார்.
இதனால் உழக்குடியில் விரைவில் அகழாய்வு துவங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


