தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் நடைபெற்ற 6 கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் 6 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. தூத்துக்குடியில் ஒவ்வொரு கொலை வழக்கும் முக்கியமானதாகும். எந்தப் பிரச்சினையில் கொலை நடந்தாலும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 4 நாட்களில் நடந்த கொலை வழக்குகள் குறித்து விசாரித்தபோது, அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட யாருக்கும் இதற்கு முன்பு எந்த வழக்குகளும் கிடையாது; போலீசாரின் கண்காணிப்பில் இருந்தவர்களும் கிடையாது. இந்த 6 வழக்குகளும் சிவில் பிரச்சினை, பாதை பிரச்சினை, காதல் பிரச்சினை மற்றும் நண்பர்களுக்கு இடையே நடந்த தகராறு காரணமாகவே நடந்துள்ளன” என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் 65 கொலை வழக்குகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 59 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொலை வழக்குகள் 10 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தகைய கொலைச் சம்பவங்களைக் குறைப்பதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கிராமங்கள் தோறும் சென்று கலந்தாய்வு கூட்டம் நடத்துவது, மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் சிவில் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் பிணைப்பத்திரம் பெறுவது போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் கோர்ட்டில் ஜாமீன் பெறாமல் தடுத்து நிறுத்த வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.