வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் எச்சரிக்கை மற்றும் கனமழை அபாயம் காரணமாகத் தூத்துக்குடி மீனவர்கள் 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள 270 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் தீவிரம் அடைந்து வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கப்பல்களுக்கு எச்சரிக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் அக்டோபர் 25 முதல் 29-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள 270 விசைப்படகுகளும் கரையில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.