கேரள தமிழக முதல்வருக்கு தமிழர் விடுதலைக் கொற்றம் தலைவர் அ. வியனரசு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ள நெய்யாறு இடதுகரைக் கால்வாய் , செண்பக வல்லி அணைக்கட்டு, பம்பா & அச்சன் கோயில் & வைப்பாறு இணைப்பு, பாண்டியாறு & புன்னம்புழா மற்றும் பரம்பிகுளம்& ஆழியாறு நீர்ப்பங்கீடு தொடர்பாக தமிழக &கேரள முதல்வர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைத் தொடங்கியதைத் தமிழர் விடுதலைக் கொற்றம் வரவேற்கிறது. இரு முதலமைச்சர்களையும் பாராட்டுகிறது.
1965 இல் அப்போதைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர், கேரள முதல்வர் சங்கர் இருவரும் தொடங்கி வைத்த நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டத்தை 2004 முதல் கேரள அரசு முடக்கி விட்டது. அதுபோல் 1773 இல் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் தமிழக சிவகிரி பாளையப்பட்டுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன் படிக்கைப்படி மேற்குத் தொடர்ச்சி மலை தீர்த்தப்பாறை என்ற இடத்தில் கட்டப்பட்டது தான் செண்பகவல்லி அணையாகும்.
1971 இல் பெரும் வெள்ளம் காரணமாக கேரள பொதுப்பணித்துறை வனத்துறையினரால் உடைக்கப்பட்ட இந்த அணையை சீரமைக்க 5,15,000 தமிழக அரசு செலுத்தியும் கேரள அரசு அணையைச் சீரமைக்காமல் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணத்தைத் திருப்பி அனுப்பியது. இது குறித்து 2006 இல் உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவையும் கேரள அரசு மதிக்கவில்லை. என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வலியுறுத்திகிறேன்.
திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டக் கால கோரிக்கை திட்டமான பம்பா &அச்சன்கோவில் &வைப்பாறு இணைப்புத் திட்டத்தைச் செயற்படுத்த 1980 முதல் 2006 வரை நடுவணரசின் நீர் வளத்துறை 3 முறை பரிந்துரை செய்தும் இத்திட்டத்தை நிறைவேற்ற காலம் கடத்துவது தேவையற்ற வகையில் திட்டமிட்டுத் தொகையைக் கூடுதலாக்கும். எனவே தற்போது பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ள தமிழக அரசு முதலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற போர்க்கால செயற்பாடு போல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறேன்.
மேலும் உச்ச நீதி மன்ற இறுதித் தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் அதுபோல் பாண்டியாறு- புன்னம்புழா, ஆழியாறு – பரம்பி குளம் திட்டங்களின் நீர் பங்கீடு தொடர்பாகவும் இக்கால கட்டத்திலேயே உடனடி தீர்வு காண தனிக் கவனம் செலுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி அவர்களைத் தமிழக விடுதலைக் கொற்றம் வேண்டிக்கொள்கிறது.
என்றுஅவர் அறிக்கையில் கூறியுள்ளார்.