ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியில் அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருக்கு சிமெண்டிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய இளம் தமிழர் மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமையில், ‘பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழு’ பொறுப்பாளரான எஸ்.வி.பி.எஸ்.ஜெயக்குமார் மற்றும் சிலை சீரமைப்புக் குழுவினர் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும்
தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பலமுறை மனு அனுப்பியும் எந்தப்பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், சேதமாகிய நிலையிலுள்ள காமராஜரின் சிமெண்ட் சிலைக்கு பதிலாக அதே இடத்தில் வெண்கலத்தினாலான புதிய சிலையை நிறுவிட அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு திறப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருந்தபோதும் இதற்கான முறையான அனுமதி தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை. அனுமதி வழங்க தாமதித்து வருவதைக் கண்டித்தும், தயார் நிலையிலுள்ள வெண்கலத்திலான புதிய காமராஜர் சிலையை அவ்விடத்தில் நிறுவுவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் அக்டோபர் 2ம் தேதி சேதமான காமராஜர் சிலை முன்பாக அகில இந்திய இளம் தமிழர் மன்றத்தினர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழுவினர் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று ஆழ்வார்திருநகரியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய இளம் தமிழர் மன்ற தலைவர் ராஜபாண்டியன் தலைமையில், ‘பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழு பொறுப்பாளர் எஸ்.வி.பி.எஸ்.ஜெயக்குமார், முன்னாள் எம்பி ஜெயதுரை முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி பனங்காட்டு படை நாங்குநேரி சட்டமன்ற தொகுதி (இடைத் தேர்தல்) வேட்பாளர் ஹரி , அகில இந்திய இளம் தமிழர் மன்றத்தினர், ‘பெருந்தலைவர் காமராஜர் சிலை சீரமைப்புக்குழுவினர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி சுரேஷ்குமார் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து, இன்னும் ஒரு வார காலத்திற்குள் சிலை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கும் என்ற உறுதிமொழியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.