ஸ்ரீவைகுண்டம் தாலூகா காட்டு நாயக்கன் குடியிருப்பு மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்குமா? மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
கருங்குளம் ஒன்றியம் கீழப்புத்தனேரி காட்டுநாயக்கன் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் மனைவி ஸ்வேதா . இவர் காட்டுநாயக்கன் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுபோலவே இந்த குடியிருப்பில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. இது குறித்து ஸ்வேதா மாவட்ட ஆட்சி தலைவரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் கருங்குளம் பகுதியில்உள்ள நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்ய வந்தார். அவர் கீழபுத்தனேரி பஞ்சாயத்து காட்டுநாயக்கன் குடியிருப்பு பகுதியில் இந்த மக்களை சந்தித்து ஆய்வு செய்தார். ஸ்வேதா தற்போது பி.காம் முடித்துள்ளார். இவர் கடந்த 2008 முதல் 8 வது வகுப்பு படிக்கும் போதே சான்றிதழ் வேண்டி முயற்சி செய்தார். தற்போது தான் இவருக்கு சான்றிதழ் தருவதற்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்பில் இருந்து கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சாதி சான்றிதழ் வேண்டி மனு செய்தால் அவர்களுக்கும் உடனே சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சி தலைவர் உறுதியளித்தார்.
அதன் பின் அவர் வசவப்பபுரத்தில் மரக்கன்று நடும் பணியை பார்வையிட்டார். விட்டிலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் குடிதண்ணீர் உறைகிணறு பணியை பார்வையிட்டார். ஊராட்சி மன்ற கட்டிட பணியை ஆய்வு செய்தார். விட்டிலாபுரத்தில் மண்புழு கொட்டகையை பார்த்தார். மணக்கரை பஞ்சாயத்தில் கட்டப்பட்டு வரும் மருதூர் கீழக்கால்வாயில் கட்டப்பட்டு வரும் பாலத்தினை பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உதவி திட்ட இயக்குனர் தேவிகா, ஆணையாளர் வெங்கடாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் தாசில் தார் சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், பரஞ்சோதி, முத்துலெட்சுமி, பொறியாளர்கள் நேரு பாண்டியன், பீர் முகம்மது, பணி மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், சிவகுமார், சுப்பிரமணியன் உள்பட பலர் உடன் சென்றனர்.


