தாமிரபரணி கரையில் நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தில் பிறந்தவர் நெல்லை பாலு. நான் 1988 ல் அகில இந்திய வானொலி இளைய பாரத்தில் சிறுகதை எழுதிக் கொண்டு தனியார் பேருந்து நடத்துனராக இருந்த போது என்னோடு தொடர்பு கொண்டார். என்னைப் போன்ற பல எழுத்தாளர்கள் சிறுகதைகளை இணைத்து நூல் வெளியிடுவோம் என முயற்சி செய்தார். அதன் பின் அது நடைபெறவில்லை- ஆனாலும் தோளில் ஜோல்னாப் பையுடன் எப்போதும் சுறுசுறுப்பாக விளங்கும் அவர் கிருபானந்தவாரியார், காஞ்சி மடத்துடன் தொடர்பு கொண்டவர். தாமிரபரணி மீது பற்று கொண்டவர். இதற்கிடையில் அவர் மதுரைக்குச் சென்று விட்டார் என அறிந்தேன். சுமார் 30 வருட காலமாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. நான் நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர் எழுதக் கோபால சமுத்திரம் சென்ற போது டாப் டிவி ராஜா நெல்லை பாலு அவர்களின் அகரஹார வீட்டைக் காட்டினார். பழமை மாறாமல் அப்படியே இருந்தது. அப்போது அவரது சகோதரி வந்து என்னைக் கண்டு மீண்டும் என்னிடம் நெல்லை பாலு அவர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்துப் பேச வைத்தார். அதன் பின் வாட்ஸ் அப் மூலம் எங்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். பாரதி நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடி 25 பேருக்கு பாரதி புரஸ்கார் விருது கொடுக்கிறோம். நீங்களும் ஒருவர் என்றார். அவர் குறிப்பிட்ட நேரத்துக்கு மதுரை சென்றேன். மிகப் பிரமாண்டமான ஹோட்டலில் பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்திருந்தார். லேனா தமிழ்வாணன் கரத்தினால் விருது வழங்கினார்.விழா தலைமையாகத் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் இருந்தார். மிகப்பெரிய ஆள்களுடன் தொடர்பு கொண்டு தொய்வில்லாமல் நற்பணிகள் பல வற்றை நெல்லை பாலு செய்து வருவதை நான் கண்டேன். மகிழ்ந்தேன். நெல்லை பாலு அவர்கள் தாமிரபரணி கரையில் பிறந்து வைகை’ கரையை கலக்கிறார். அந்த அளவுக்கு மதுரை பிரபலங்கள் எல்லோரும் இவரின் அன்புக்கு அடிமை. நெல்லை பாலுவே நம்ம ஊரு காரர் என்று கூற பெருமைப் படுகிறேன். . தொடரட்டும் உங்கள் பணி.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


