
016. எதார்த்த இயக்குநர் தூத்துக்குடி கே.எஸ். தங்கசாமி
ராட்டினம் திரைப்படம் இயக்குனர் கே.எஸ் தங்கசாமி தூத்துக்குடி துறைமுகம் மாண்பை மிகச்சிறப்பாக பாடல் மூலம் வெளிப்படுத்தி எதார்த்த காதல் கதை சொல்லியிருப்பார். அதன் பின் ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் எட்டுத்திக்கும் மதயானை என்ற திரைப்படத்தினை எடுத்திருந்தார். முழுக்க நெல்லை மண்ணில் படப்பிடிப்பு நடந்த படம். இதில் சுமார் 42 நெல்லை முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. நண்பர் நெல்லை முத்தமிழ் மூலமாக நானும் இயக்குனரோடு அறிமுகம் ஆனேன். சுமார் 5 நாள்கள் செய்துங்கநல்லூரில் படப்பிடிப்பு நடந்தது. சொந்த ஊரில் என்னை நடிக்க வைத்தார். அதுவும் சன் தொலைக்காட்சி புகழ் அசத்தப் போவது யாரு திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் அவர்களோடு என்னை நடிக்க வைத்தார். இயக்குனர் தோன்றும் காட்சிகளிலும் நான் நடித்தேன். தற்போது ராஜ் தொலைக்காட்சியில் தொடர்ந்து இந்த திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனக்கு நடிகர் அந்தஸ்தைக் கொடுத்தது இந்தப்படம் தான். இயக்குனர் மிகவும் அமைதியானவர். படப்பிடிப்பு காலை 7 மணி என்றால் 6.30 மணிக்கு வந்து விடுவார். என்னை டப்பிங் பேச வைத்தார். இதில் நான் மட்டுமல்லாமல் நடித்த புதியவர்களுக்கு உரியச் சம்பளத்தினை கொடுத்தார். அடுத்த படம் எடுக்க ஆயத்த நிலையில் இருக்கும் கே.எஸ். தங்கசாமி மேலும் பல புகழ்களை அடைய வேண்டும். மீண்டும் நெல்லை தூத்துக்குடி மண்ணில் சிறந்த கதைக் களத்தினை அமைத்துப் படத்தினை எடுக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு