மருதூர் உழக்குடி கொற்கை ஆத்தூர் பகுதியில் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் மதுரை உயர் நீதி மன்றத்தில் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், இங்கு உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், 2004 ல் நடந்த அகழாய்வு அறிக்கை தரவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கிருபாகரன் , சுந்தர் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன் படி தற்போது ஆதிச்சநல்லூரில் மாநில அரசு அகழாய்வு செய்துள்ளது. மத்திய அரசு உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான இடம் பார்க்க திருச்சி மண்டல மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அருண்ராஜ் ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்தார். 2004 ஆம் ஆண்டிற்கான அகழாய்வு அறிக்கை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர்நீதி மன்றத்தில் மேலும் மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். அதில் கொற்கையை மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும், ஆத்தூர் உமரிக்காடு இடையே ஆற்றுகுள் மூழ்கி கிடக்கும் பழங்கால கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும். மருதூர் அணையில் உள்ள கல்வெட்டுகள் , ஆங்காங்கே கிடக்கும் கோயில் சிற்பங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்தார். நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி இது குறித்து மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவு இட்டனர்.
இதற்கிடையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், மத்திய தொல்லியல் அதிகாரி அறவாழி, சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், தங்கதுரை ஆகியோர் கொற்கை, ஆத்தூர் மருதூர் அணைக்கட்டு ஆகிய பகுதியில் பார்வையிட்டனர். அதன் பின் உழக்குடி யை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆறுமுக மாசன சுடலை, அவருடைய வழிகாட்டி சசிகலா வழிகாட்டுதலுடன் கண்டு பிடித்த உழக்குடி காட்டுக்குள் உள்ள 14 அடி உயரமான நடுக்கல்லை பார்வையிட்டனர். அவர்களுடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியர் சிவகளை மாணிக்கம், ஆய்வு மாணவர் ஆறுமுக மாசன சுடலை உள்பட பலர் உடன் வந்திருந்தனர்.
இந்த இடங்கள் குறித்து இவர்கள் அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்பிப்பார்கள் . அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஆதிச்சநல்லூர் கரையில் அலெக்ஸாண்டர் இரியா சுட்டிகாட்டிய 37 இடங்களில் தொல்லியல் தடங்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. வரும் நீதியாண்டில் ஆதிச்சநல்லூர்,சிவகளை, கொற்கை உள்பட மேலும் கூடுதலான இடத்தில் அகழாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
===


