மருதூர் அணைக்கட்டில் சீறிபாயும் தண்ணீர் காண்பதற்கு கண்ணை கவருவதாக உள்ளது. இந்த இடத்தினை சுற்றுலா தலமாக அறிவித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைகட்டு மருதூர் அணைக்கட்டு . தாமிரபரணியிலே மிக நீளமான தடுப்பணை இது. இந்த அணைக்கட்டு 4096 அடி நீளம் கொண்டது. அனகோண்டா பாம்புபோல வளைந்து கிடக்கும் இந்த அணையில் மருதூர் மேலக்கால் கீழக்கால் மூலமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கட்டுக்குள் உள்ள முள்செடிகளை கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி ஏற்பாட்டில் பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுத்தம் செய்தார். இங்கு மிகவும் பழைமையான மருதவல்லி சோழவல்லி கோயில் உள்ளது. மழைக்காலங்களில் இங்குள்ள மறுகாலில் தண்ணீர் விழுவது கண்கொள்ளா காட்சியாகும். எனவே இவ்விடத்தில் சுற்றுலா தலமாக அமைத்து, இங்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.