புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்திய வீல்சேர் கிரிக்கெட் பிரீமியர் லீக் (IWPL) தொடரின் இறுதிப்போட்டியில், ஜம்மு காஷ்மீர் அணி விதித்த 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை அதிரடியாகச் சேஸ் செய்து தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய வீல்சேர் கிரிக்கெட்டின் மிக முக்கியத் தொடரான ஐடபிள்யூபிஎல் சீசன் 7 போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூன் 21 வரை புதுடெல்லி துவாரகாவில் உள்ள பால் பவன் சர்வதேச பள்ளி மைதானத்தில் நடைபெற்றன. இத்தொடரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. இதில் சந்தோஷ் தலைமையில் களம் கண்ட தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணி, தொடர் முழுவதும் தோல்வியே சந்திக்காமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
துவாரகாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, வலுவான ஜம்மு காஷ்மீர் அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் தமிழக அணிக்கு 250 ரன்கள் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தது.
அடுத்துக் களம் இறங்கிய தமிழ்நாடு அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில், 250 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை தமிழ்நாடு அணி வெறும் 19 ஓவர்களிலேயே வெற்றிகரமாக எட்டிப் பிடித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இதன் மூலம் ஐடபிள்யூபிஎல் சீசன் 7 தொடரின் சாம்பியன் கோப்பையைத் தமிழக அணி அதிகாரப்பூர்வமாகத் தட்டிச் சென்றது.
இறுதிப்போட்டியை நேரில் காண டெல்லி அமைச்சர்கள், பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் நார்வே நாட்டுத் தூதர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கினர். தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணியின் இந்த தேசிய சாதனைக்கு அதன் தலைவர் துரைப்பாண்டியன், தலைமைப் பயிற்சியாளர் அனிஷ் நடராஜன், அணித்தலைவர் சந்தோஷ் மற்றும் அணியின் அனைத்து வீரர்களின் கூட்டு உழைப்பே முக்கியக் காரணம் என விளையாட்டுப் பிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


