மணிமுத்தாறு அணை தண்ணீரை நம்பி
சேரகுளம் பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பம்
தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கோரிக்கை
மணிமுத்தாறு அணை தண்ணீரை நம்பி சேரகுளம் பகுதியில் விவசாய பணிகள் ஆரம்பம் தண்ணீர் திறக்கவேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலூகா, சேரகுளம் சுற்றுபகுதியில் மணிமுத்தாறு பாசன குளங்கள் உள்ளன. இதில் சேரகுளம், இலுப்பைகுளம், தீராத்தி குளம், வெட்டிகுளம், இராமனுஜம்புதூர், கிருஷ்ணன் குளம், சாத்தனேரி குளம், தெற்குகாரசேரிகுளம், கிளாக்குளம், வல்லகுளம், அரசர்குளம், புதுக்குளம், உதய நேரி குளம், திருவரங்கநேரி குளம், கோவை குளம் உள்பட பல குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். மணிமுத்தாறு அணையில் 80அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் நான்குநேரி, சாத்தான்குளம் உள்பட பகுதிகளை நான்கு பகுதிகளாக பிரித்து தண்ணீர் வழங்குவார்கள். இதில் ஒரு வருடம் 1 மற்றும் 2 வது ரீச்சிக்கும், மறு வருடம் 3 வது மற்றும் 4 வது ரீச்சிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும்.
இதற்கிடையில் கருங்குளம் பகுதியில் மேற்கண்ட குளங்கள் 3 வது ரீச்சிக்கு உள்பட இடமாகும். இந்த ஆண்டு பெய்யும் மழையில் மணிமுத்தாறு அணை நிறைந்து வருகிறது. இந்த ஆண்டு முறை படி 3 வது மற்றும் 4 வது ரீச்சுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். எனவே இதை நம்பி இந்த பகுதியில் விவசாயிகள் நடவு பணியை ஆரம்பித்து விட்டார்கள். மழை பெய்தும் கூட இந்த பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் கிணறுகள் நிரம்ப வில்லை. ஆனாலும் மணிமுத்தாறு அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீர் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என விவசாய பணியை துவங்கி உள்ளனர். எனவே மணிமுத்தாறு அணையை இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பகுதிக்கு திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


