முத்தாலங்குறிச்சி குளத்து மண்ணை வெளியேற்ற மாட்டோம் என பெண்கள் மத்தியில் மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி உறுதி அளித்தார்.
செய்துங்கநல்லூர் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி குளத்தில் ஊர் ஒன்று கை நூறு திட்டத்தின் கீழ் பராமரித்து தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை துவக்கி வைக்க முத்தாலங்குறிச்சி குளத்துக்கு மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி வந்தார். அவரிடம் பெண்கள் குணேஸ்வரி தலைமையில் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் முத்தாலங்குறிச்சி குளத்தினை இதற்கு முன்பு தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஒரு பனை உயரத்துக்கு பள்ளத்தோண்டி அதை அப்படியே பள்ளமாக வைத்து விட்டனர். இதுபோல் முத்தாலங்குறிச்சி குளத்தினை பள்ளம் தோண்டியதால் தற்போது குளத்தில் ஒரு சொட்டுதண்ணீர் கூட நிற்பதில்லை. எனவே தற்போது குளத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றி மேடுபள்ளத்தினை ஒன்றுபோலாக்கி குளத்தினை சீரமைக்க வேண்டும். இங்கிருந்து ஒரு வண்டி மண் கூட விற்பனைக்கு சென்று விடக்கூடாது என கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி, இந்த திட்டம் குளத்தினை தூர் வாரி செம்மை படுத்துவது மட்டும் தான். எந்த காரணத்தினை கொண்டும் குளத்து மண் வெளியேற்றப்படாது என உறுதி அளித்தார். அப்போது பெண்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சி தலைவர் பேசும் போது, இந்த கிராமத்துக்கு மக்கள் குளத்தினை தூர்வாரவேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் குணேஷ்வரி தலைமையில் காத்து கிடந்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்று தற்போது ஊர் ஒன்று கை நூறு திட்டத்தின் கீழ் இந்த குளத்தினை தூர்வாருகிறோம். இதில் பொதுப்பணித்துறை பங்களிப்பும், உள்ளூர் பிரமுகர்கள் பங்களிப்பும் உண்டு. மேலும் இதே போல் மரங்களை பாதுகாப்பது, மழை நீர்சேகரிப்பு தொட்டி நிறுவுவது உள்பட பல திட்டங்கள் இன்று மிகவும் தேவையாக உள்ளது. எனவே அதற்கான நடவடிக்கையை பொதுமக்களும் செய்ய வேண்டும் என கூறினார்.
பின் அவர் முத்தாலங்குறிச்சி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள அரசு அலுவலகங்களில் தண்ணீர் வீணாகாமல் இருக்க அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டார். முத்தாலங்குறிச்சி வடக்கூர் சுடுகாடு செல்லும் பாதையை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஊர் பொதுமக்கள் காட்டினர். அதன் ஆக்கிரமிப்பை அகற்ற சப் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் கூறினார்.
மேலும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் & மணக்கரை சாலையை சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சப்கலெக்டர் சிம்ரன் சித்சிங் கலோன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா சங்கர், தாசில்தார் சந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசன், கருங்குளம் ஆணையாளர் சுப்புலெட்சுமி, செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுக சேகர், வருவாய் ஆய்வாளர் அய்யனார் , கிராம நிர்வாக அலுவலர் கந்தசிவசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.