தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டாரத்திற்கு உட்பட்ட தெய்வச்செயல்புரத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மக்காச்சோளத்தை படைப்புழுக்கள் எனப்படும் வெளிநாட்டு புழு தாக்குகிறது. இந்த புழு அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த புழு கடந்த வருடத்தில் இந்தியாவிற்குள் வந்ததால் 3ல் ஒரு பங்கு மக்காச்சோள பயிர்களின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த படைபுழுவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெய்வச்செயல்புரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி இன்று நடந்தது. இந்த பயிற்சியை மாநில வேளாண்மை இயக்குநர் தெட்சிணா மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த பூச்சியானது வெளிநாடுகளில் இருந்த தற்போது இந்தியாவிற்குள் வந்துள்ளது. இதனால் மக்காச்சோளம் கடந்த வருடம் மிகவும் பாதிக்கப்பட்டது. எனவே அதை அழிக்கும் முயற்சியாக தமிழகத்தில் மக்காச்சோளம் பயிரிடப்படும் 17 மாவட்டங்களில் 86 ஆயிரம் ஹெக்டேருக்கும் 46 ஆயிரம் கோடி செலவில் இந்த மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மக்காச்சோளம் 15 ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிரிடப்படுகிறது. இந்த பயிர்களை காப்பாற்றுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் 4.9 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இன்று ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.