செய்துங்கநல்லூர் அருகே உள்ள எஸ்.என்.பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றுள்ளது. இந்த தோட்டத்தில் கண்காணிப்பாளராக மாரி என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று அதிகாலை கிணற்றில் பார்த்த போது அங்கு ஆண் மயில் ஒன்று விழுந்து கிடந்தது. காலில் அடிப்பட்ட காரணத்தினால் மயிலால் நீந்த முடியவில்லை. தண்ணீரில் மிதந்த மயில் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. உடனடியாக அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் விமல் குமார் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் கந்தசாமி, சண்முகவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கயிறு மூலம் இறங்கி அந்த மயிலை கட்டி தூக்கி வெளியே கொண்டு வந்தனர். மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த ஆண் மயிலை காப்பாற்ற கால்நடைமருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அவர் வருவதற்குள் அந்த மயில் இறந்தது.