
முத்தாலங்குறிச்சியில் மனித நேசத்தினை மிஞ்சிய பாம்பு நேசம். பெண் பாம்பு குஞ்சி பொறித்ததை தேடி வந்த ஆண் மலை பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தாலங்குறிச்சி பிள்ளையார் கோயிலை சேர்ந்தவர் சுப்புலெட்சுமி (50). இவருக்கு சொந்தமான வைக்கோல் போர் சிவன் கோயில் அருகில் உள்ளது. கடந்த ஜுலை மாதம் 23 காலை 10 மணி யளவில் அவர் வைக்கோல் போரில் மாட்டுக்கு வைக்கோல் சேகரிக்க சென்ற போது வித்தியாசமான சத்தம் வந்தது. அப்போது அவர் கூர்ந்து பார்த்த போது அங்கு மலை பாம்பு ஒன்று அடை காத்து கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அவர் கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு வசம் தெரிவித்தார். அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனகாப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வந்த வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்தனர். அடைகாத்த பாம்பை பத்திரமாக பாதுக்காக்க வேண்டி பாம்பு ஆர்வலர் ரமேஷ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரமேஷ் மூட்டையோடு பாம்பை லவகமாக பிடித்து வல்லநாடு மலைப்பகுதியில் வாக்கி டாக்கி டவர் அருகில் அமைக்கப்பட்டிருந்த பாம்பு அடைகாக்கும் பகுதியில் கொண்டு பத்திரமாக சேர்த்தார். அதன் பின் அந்த பாம்பு நேற்று முன்தினம் காலை 7 குஞ்சுகள் பொறித்தது.
அதன் பின் நேற்று காலை அந்த குஞ்சிகளையும் தாய் பாம்பையும் வனத்துறையினர் வல்லநாட்டு மலையில் விட்டனர்.
இதற்கிடையில் முத்தாலங்குறிச்சியில் அந்த பாம்பு அடைகாத்த அதே இடத்தில் மற்றொரு பாம்பு வந்து சுருண்டு படித்துகிடந்தது. அருகில் சென்றவர்களை மிகப்பெரிய சத்தமிட்டு விரட்டியது. இது குறித்து முத்தாலங்குறிச்சி வி.ஏ.ஓ கந்தசுப்பு வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனச்சரகர் அலுவலர் விமல் குமார் தலைமையில் வனவர் சேகவன், வன காப்பாளர் பாலகிருஷ்ணன், வேட்டை தடுப்பு காவலர்கள் சுடலை முத்து ராமன், சண்முகவேல், கந்த சாமி கொண்ட குழுவினர் மலை பாம்பு இருந்த இடத்துக்கு வந்தனர். அந்த பாம்பை பிடித்தனர்.
இந்த பாம்பு கடந்த மாதம் பிடிப்பட்ட பாம்பை விட மிகப்பெரியதாக இருந்தது. மேலும் பயங்கரமாக சீறிக்கொண்டிருந்தது. இதனால் பாம்பை கையில் பிடித்து புகைப்படம் கூட எடுக்க முடியவில்லை. நேற்று முன்தினம் வல்லநாடு வனத்துறையில் குஞ்சி பொறித்த பாம்பு பெண் பாம்பு என்றும், நேற்று காலை பாம்பு குஞ்சு மற்றும் பாம்பு வனத்துறைக்குள் சென்று விட்டது. எனவே தற்போது குஞ்சி வெளியேறும் இடம் என்பதால் அதே வேளையில் ஆண் பாம்பு இங்கு வந்திருக்கவேண்டும் என இவ்வூர் பெரியவர் கூறினர்.
பெரும்பாலும் மனிதநேயம் கேள்வி பட்டிருக்கிறோம்.இங்கு நடந்த பாம்புநேயம் மக்களை நெகிழ வைத்தது.அதே நேரம் மாதம் ஒரு பாம்பு படை எடுப்பதை கண்டு இவ்வூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுக்குறித்து இவ்வூரை சேர்ந்த சுப்புலெட்சுமி கூறும் போது, எங்கள் ஊரில் அடிக்கடி கோழி, ஆட்டு குட்டி காணாமல் போய் விடும். அதை இந்த மலை பாம்புகள் தான் தூக்கி சென்றுள்ளது. கடந்த மாதம் போல இந்த மாதமும் மலை பாம்பு பிடிப்பட்டுள்ளது. எனவே இதுபோல பல பாம்புகள் இங்கு இருக்கும் என தெரிகிறது. எனவே இந்த பாம்புகளை வனத்துறையினர் பிடித்து எங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என கூறினர்.
இதுகுறித்து ஊர்வன பாதுகாவலர் ரமேஷ்வரன் இடம் கேட்ட போது, தாமிரபரணி ஆற்றங்கரையில் இதுபோல் பல மலைப்பாம்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இந்த பாம்புகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த பாம்புகள் கோழிகுஞ்சி, போன்ற உருவத்தில் சிறிய பறவை மற்றும் விலங்குகளை மட்டுமே உண்ணும் . மக்கள் நினைப்பது போல மனிதனை விழுங்காது. மேலும் இது நஞ்சு வகையை சேர்ந்தது அல்ல. மேலும் தற்போது இங்கு மக்கள் பரவலாக பேசுவது போல ஆண்பெண் பாசம் எல்லாம் மலைபாம்புக்கு கிடையாது. குழுவாக இது வாழவும் வாழது. இனப்பெருக்கம் நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பாம்புகள் பெண் பாம்புகளுடன் கூடும். பெண் பாம்பு கூட குஞ்சிபொறித்தவுடன் தனியாக கிளம்பி விடும். எனவே பாசத்தில் மலைபாம்பு இங்கே வரவில்லை. மலைபாம்பு வாழ்வதற்கு வசதியாக முத்தாலங்குறிச்சி கிராமம் இருக்கிறது . அதனால் தான் இங்கு அதிகமான மலைப்பாம்பு வசிக்கிறது என்றார்.