ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர். முன்னிலையில் திறக்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 10க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் ஏற்கனவே 12 முதுமக்கள் தாழிகள், சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ் விடப்பகுதிகள், 3500 ஆண்டுகள் முதல் 150 ஆண்டுகள் வரை ஆதிச்சநல்லூரில் மனிதர்கள் வாழ்ந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுண்ணாம்பு தளம் உள்படப் பல அபூர்வ கண்டுபிடிப்புகள் நடந்து வருகிறது.
ஆதிச்சநல்லூரில் இரண்டாம் அடுக்கில் உள்ள 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முதுமக்கள் தாழிக்குள் ஆய்வாளர்கள் தேடிய பல்வேறு பொருள்கள் இருக்கும் என நம்பப்பட்டது. எனவே இந்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து அதற்குள் இருந்து பொருள்களை எடுக்க ஏற்பாடு செய்தனர். அவ்விடத்துக்குக் கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர். மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் உடன் வந்தனர்.
அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சுண்ணாம்பு தளத்தை அவர்கள் பார்வையிட்டனர். அதன்பின்னர் பழமையான முதுமக்கள் தாழி கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர். முன்னிலையில் திறக்கப்பட்டது. அந்த முதுமக்கள் தாழியில் மனிதனின் மண்டையோடு, கால் எலும்புகள், சிறு பானைகள், கலையங்கள் இருந்ததை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் பானைகளில் தானியங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பக்கவாட்டிலேயோ அல்லது தாழிக்குள்ளே ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்வு உள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
ஆய்வுகள் குறித்து தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண் ராஜ் விளக்கமளித்தார்.
தொல்லியல் ஆய்வாளர்கள் எத்தீஸ்குமார், முத்துக்குமார், விக்னேஷ், கலைச்செல்வன், ஸ்ரீ வைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முன்னாள் ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், புளியங்குளம் வேல்மயில் உள்படப் பலர் உடனிருந்தனர்.


