தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.
நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணை நிரம்பி வருகிறது.
இந்நிலையில் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு மருதூர் அணையில் இருந்து பிரியும் மேலக்கால், கீழக்கால் வாய்க்கால்கள் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் வடகால், தென்கால் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
இந்நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைககட்டான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு வெளியேறி வருகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியாமல் ஆண்டுதோறும் வீணாக தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து பல்லாயிரக்கணக்கான கன அடித் தண்ணீர் வீனாக வெளியேறி கடலில் கலந்து வரும் நிலையிலும் கோடைகாலங்களில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.


