தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ஏராளமானோர் மீன் பிடித்தொழிலை நம்பியுள்ளனர். 400க்கு மேற்பட்ட படகுகளில் 10ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுப்பட்டுள்ளனர். பெரியதாழை கடலில் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் மீன் பிடித்தொழில் பாதிக்கப்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது என மீனவர்கள் புகார் தெரிவித்தன்பேரில் கடந்த 5ஆண்டுகளுக்கு ரூ25 கோடியில் மேற்கு பகுதியில் 800 மீட்டர் அளவிலும், கிழக்குபகுதியில் 200 மீட்டர் அளவிலும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனாலும் குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து கடற்கரையில் மணல் அரிப்பு ஏற்படுகிறது.
இதனால் கரைகளில் படகுகளை நிறுத்த முடியவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் மேற்கு பகுதியில் 360 மீட்டர் அளவிலும் , கிழக்கு பகுதியில் 240 மீட்டர் அளவில் தூண்டில் வளைவை நீட்டித்து அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஓப்பந்தபணியும் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை பெரியதாழையில் அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் பெரியதாழை கடலில் பெரிய கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் கிழக்கு பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படகுகளை கடலில் இழுத்து செல்லப்பட்டது. மீனவர்கள் அதனை மீட்டு வந்தனர். கடல் அரிப்பு உண்டாகி பாதிக்கப்பட்டு வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இதையொட்டி மேற்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகளை அவர்களது வீட்டருகே மேடான பகுதியில் நிறுத்தியிருந்தனர். ஆதலால் தூண்டில் வளைவு பணியை விரைந்துதொடங்க மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்