ஆதிச்சநல்லூர் மக்கள் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியானது துவங்கியது.
இந்த பணியில் இந்த பணியில் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் துறை லோகநாதன் ஆகியோர் தலைமையில் 10 மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் போடப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், தற்போது வாழ்விடங்களை கண்டு பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டும் போது அங்கு மக்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் தெரிந்தது. இவை கிட்டத்தட்ட கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் குழாய் போல தென்பட்டது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் இடுகாடு உள்ளது. அங்கு ஏராளமானவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர். இதுபோல வாழ்விடம் பல்வேறு இடங்களில் தென்படும், எனவே ஆய்வாளர்கள் உற்சாகமாக பணிகளை தொடர்ந்து உள்ளனர். இதற்கிடையில் வருகிற செப்டம்பர் 28 ந்தேதிக்குள் அகழாய்வு பணியை முடிவுக்கு கொண்டு வரவேண்டியது உள்ளது. தற்போது 28 லட்ச ரூபாய் பணம் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. கூடுதலாக பணம் ஓதுக்கீடு செய்து வரும் நீதியாண்டி ல் மேலும் அகழாய்வு செய்தால் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்விடத்தினை கண்டுபிடிக்க ஏதுவாக இருக்கும்.
மேலும் 1902 அலெக்ஸாண்டர் ரியா ஆய்வு செய்யும் போது, 37 இடங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வரைபடம் வரைந்திருந்தார். அதில் தாமிரபரணி கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் பரம்பு, பாலாமடை, மணப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம் பரம்பு, வடக்கு வல்லநாடு (உழக்குடி), வல்லநாடு, அகரம், முறப்பநாடு, வசவப்பபுரம், அனவரதநல்லூர், விட்டிலாபுரம், கொங்கராயகுறிச்சி, கருங்குளம், ஆதிச்சநல்லூர், ஸ்ரீவைகுண்டம், திருப்புளியங்குடி, புதுக்குடி, வெள்ளுர், கால்வாய், மளவராய நத்தம், ஆழ்வார்திருநகரி, அழகிய மணவாள புரம் ( செம்பூர்) திருக்கோளூர், அப்பன்கோயில், தென்திருப்பேரை, புறையூர், அங்கமங்கலம், குரும்பூர், நாலுமாவடி, நல்லூர், சுகந்தலை, கொற்கை, மாறமங்கலம், காயல்பட்டினம், வீரபாண்டிய பட்டினம் ஆகிய இடங்களை குறிப்பிட்டு இருந்தார் . ஆகவே ஆய்வாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் மேலும் பல ஊர்களில் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்று ஆய்வு செய்தால் மேலும் பல அபூர்வ தகவல்களும், இந்த உலகில் மூத்த மொழி தமிழ் மொழி எனவும் நிரூபணமாகும். இதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று தமிழக தொல்லியல் துறையினருக்கு தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


