சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த மே 25ம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியானது துவங்கியது.
இந்த பணியில் 20 தொல்லியல் அதிகாரிகள் மற்றும் ஆய்வு மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும், சிவகளையில் 26 குழிகளும் அமைக்கப்பட்டு அகழாய்வு பணியானது நடந்து வருகிறது. சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளும், அதனுள் இருந்து 100 கணக்கான பொருள்களை எடுத்துள்ளார்கள். மேலும் இங்கு கிடைத்த சுடுமண் பானை தாங்கிகள் வேறு எங்கும் கண்டுபிடிக்க வில்லை என்பது குறிப்பிட த்தக்கது.
கால்பந்து, நெற்மணிகள், தாடை பற்கள், இரும்பு கருவிகள், தமிழ் பிராமி எழுத்து, கீறல்கள் மற்றும் குறியீடுகள் போன்ற அபூர்வ சின்னங்கள் இங்கு கிடைக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 முதுமக்கள் தாழிகள் மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 தாழிகள் பிரிக்கப்பட்டால் பல அற்புத தகவல்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கும் சுடுமண் புகைப்பான், வளையல், தமிழி எழுத்து, குழந்தையின் எலும்பு கூடு, மக்கள் வாழ்விடத்தில் அவர்கள் பயன்படுத்திய வடிகால் குழாய் உள்பட பல பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை பார்வையிட தமிழக தொல்லியல் துறை இயக்குநர் உதயசந்திரன் வருகை தந்தார். அவர் சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியை பார்வையிட்டார். அதன்பின்னர் சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்களை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனையும் அவர் பார்வையிட்டார்.
சிவகளை வலப்பான் பிள்ளை திரடு ஆகிய பகுதியில் அவர் பார்வையிட்டார். அகழாய்வு இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் அலுவலர் தங்கதுரை ஆகியோர் அகழாய்வு பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இயக்குனர் உதயசந்திரனை சிவகளை ஊர் பொதுமக்கள் சார்பாக சிவகளை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, ஒன்றிய கவுன்சிலர் ராமலெட்சுமி, கிராமநிர்வாக இயக்குனர் கார்த்தீ, வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் உள்பட பலர் வரவேற்றனர்.
சிவகளையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இயக்குனர் உதயச்சந்திரனிடம், வேகமாக நடைபெறும் அகழாய்வு பணியை பாராட்டியதோடு, தற்போது நடைபெறும் ஆதிச்சநல்லூர் சிவகளை பணியில ஆய்வு முடிவுகளை கீழடியை போலவே 24 மொழிகளில் தமிழக அரசு வெளியிடவேண்டும், இங்கு கிடைத்த பொருள்களை இந்தப்பகுதியிலேயே காட்சிபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின் நிருபர்கள் அவரிடம் பேட்டி கேட்ட போது, “தற்போது நான் பார்வையிட மட்டுமே வந்துள்ளேன். விரைவில் இதன் அறிக்கையோடு உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன்” என்று கூறினார்.
அதன் பின்னர் ஆதிச்சநல்லூருக்கு அவர் வருகை தந்தார். ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வு பணி, ஆதிச்சநல்லூரின் ஊரில் உள்ள மையப்பகுதியில் வாழ்விடங்களை கண்டறியும் பகுதி, ஆதிச்சநல்லூரில் வாழ்விடமாக கருதப்படும் இடத்தில் கிடைத்த வடிகால் குழாய், தமிழி எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட இடம், பாண்டியராஜா கோயில் பரம்பு பகுதி, குழந்தையின் எலும்புகூடு கிடைத்த பனங்காட்டு பகுதி என அனைத்து அகழாய்வு குழிகளையும் அவர் பார்வையிட்டார். ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் அவரை வரவேற்றார். அகழாய்வு இயககுனர் பாஸ்கர், தொல்லியல் துறை லோகநாதன் ஆகியோர் அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட பொருள் உள்பட பல்வேறு அகழாய்வு பணியை எடுத்து கூறினார். பின் புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்களை அவர் காட்சிக்கு வைத்திருந்தனர். அதையும் அவர் பார்வையிட்டார். பின் அகழாய்வு நடைபெறும் இடத்தில் திறக்காமல் வைக்கப்பட்டிருந்த முதுமக்கள் தாழியை திறந்து, இயக்குனர் முன்னிலையில் உள்ளே உள்ள எலும்பு கூடு பத்திரமாக எடுக்கப்பட்டு, சோதனைக்கு அனுப்பபட்டது.
அவருடன் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், புதுச்சேரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜன் உள்பட பலர் வந்திருந்தனர். ஆதிச்சநல்லூரில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர், ஆறாம்பண்ணை பஞ்சாயத்து தலைவர் சேக அப்துல்காதர், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசுப்பு, சந்தன குமார், சமூக ஆர்வலர் காந்திமதிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


