எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 நூலை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சு மணி அறிமுகம் செய்து வைத்தார்.
ஆதிச்சநல்லூரில் 144 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே முதல்முதலில் அகழாய்வு நடந்தது. ஆனால் அதன் முடிவுகள் இதுவரை தெரியவில்லை. 2004 ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆதிச்சநல்லூரில் தியாக சத்தியமூர்த்தி தலைமையில் ஆய்வு நடத்தியது. ஆனால் அதன் ஆய்வறிக்கை வழங்கப்படவில்லை. இதற்கிடையில் இதன் அறிக்கையை வெளியிடவேண்டும், மீண்டும் ஆதிச்சநல்லூர் சிவகளை, தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆய்வு செய்ய வேண்டும், இவ்விடத்தில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என மதுரை உயர்நீதி மன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஆதிச்சநல்லூர், சிவகளையில் மாநில அரசு தொல்லியல் துறை மூலமாக அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி விட்டார்கள். 2004 ல் அகழாய்வு அறிக்கை மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் நடந்த சம்பவங்களை ஒன்று திரட்டி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017 என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதினார். இந்த நூலை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பிச்சு மணி பல்கலை கழகத்தில் வைத்து அறிமுகம் செய்தார். பல்கலைகழக உயிரியல் துறைத்தலைவர் டாக்டர் சுதாகரன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அபிஷ்விக்னேஷ், கோபால் உள்பட பலர்கலந்து கொண்டனர்.