வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கோவில்பத்து பஞ்சாயத்து படுகையூரை சேர்ந்தவர் சுப்பையா மகன் குப்பையாண்டி என்ற செல்லையா(62). இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். இவரும் இவரது மனைவி பாப்பாவும் ஊரில் விவசாயம் பார்த்து வருகின்றனர். இவருக்கு சொந்தமான வயல் படுகையூர் அருகில் உள்ளது. இந்த வருடம் பருவமழை பெய்த காரணத்தினால் சந்தோஷமாக விவசாயத்தினை தொடர்ந்தனர். கடந்த 1 ந்தேதி காலையில் அவர் வயல் வெளியில் நாற்று நடும் பணியை தொடர்ந்தார். அவருடன் மனைவி பாப்பாவும் நாற்று நட நெல் மூட்டையை சுமந்து வந்துபோட்டார். இவர் காலையில் இருந்து மாலை வரை நாற்று பாவி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தார்கள். இந்த தண்ணீரால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பாடாது என விவசாயிகள் விவசாய பணியை செய்து வந்தனர். ஆனால் அன்று தீடீரென்று 16 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்து வயல் காடுகளை மூழ்கடித்தது.
தனது கண் முன்பே விதைத்த விதைப்பு ஆற்று வெள்ளத்தில் வீணாக செல்வதை கண்ட செல்லையா மனமுடைந்தார். தீடீரென்று மயக்கமடைந்தார். அவர் அப்படியே வரப்பு வெளியில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர் ஓடி வந்து செல்லையாவை தூக்கி வயல்வெளியை விட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார்.
தனது கண் முன்பே வயல்வெளிஅழிவதை கண்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் படுகையூர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.