கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் சுத்தப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
தாமிரபரணி ஆற்றில் கடந்த மூன்று நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் தாமிரபரணி கரையில் உள்ள 42 இடங்களில் முதல் இரண்டு நாள் இயந்திரம் மூலமாக முள்செடிகளை பிடிங்கி அமலைசெடியை அகற்றும் பணி நடந்து வந்தது. மூன்றாவது நாளாக கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், தன்னார்வ தொண்டர்கள் மூலமாக சுத்தப்படுத்தும் பணி மற்றும் மரக்கன்று நடும் பணி நடந்தது. மருதூர் அணை, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஏரல் , முக்காணி , ஆத்தூர் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார். கருங்குளம் தாமிரபரணி ஆற்று பாலத்துக்கு அடியில் அவர் துப்புறவு செய்த பணியை பார்வையிட்டார். அதன் பின் அவர் அங்கு மரக்கன்று களை நட்டார்.
அவரிடம் கருங்குளம் பகுதி மக்கள், ஆற்றில் குளிக்கும் இடத்தில் நெடுஞ்சாலை துறையினர் பாலம் கட்டும் போது கான்கிரிட் கழிவுகளை இரும்பு கம்பிகளோடு கொட்டி விட்டு சென்று விட்டனர். அதை அகற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே இந்தகோரிக்கை மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் பொக்கலின் இயந்திரம் மூலமாக இந்த கழிவு கான்கிரிட் கம்பிகள் அகற்றி தரப்படும் என வாக்களித்தார். கருங்குளத்தில் பணியாற்றிய சமூக ஆர்வலர்கள், கிராம உதயம் தொண்டு நிறுவன தன்னார்வ தொண்டர்கள், நம் தாமிரபரணி அமைப்பினர், கல்லூரி மாணவர்களை அழைத்து தனித்தனியாக பாராட்டினார். கருங்குளம் பகுதியில் பனங்கொட்டை சேகரித்து நடவு பணி செய்யும் ராமகிருஷ்ணனை பாராட்டி மாவட்ட ஆட்சி தலைவர் கௌரவித்தார். கருங்குளம் ஆற்றங்கரையில் அவர் மூலமாக சுமார் 200 பனங்கொட்டைகள் நடபோவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைகழக முதல்வர் சத்திய நாதன், சப் கலெக்டர் சிம்ரன் சிப்சிங் கலோன், கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, உதவி இயக்குனர் உமா சங்கர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சிவராஜன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துலட்சுமி, தங்கசாமி, கிராம உதயம் இயக்குனர் சுந்தரரேசன், நம் தாமிரபரணி நல்லபெருமாள், வித்தியாசாகர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கல்யாண ராமன், சிகாமணி, கருங்குளம் பொறுப்பாளர் முருகன், கேசவன், சச்சின் முத்துகுமார், பஞ்சாயத்து எழுத்தர் சோமு, இசக்கி முத்து, காசி, முருகன், சங்கரபாண்டியன், பூல்பாண்டியன், ஆறாம்பண்ணை சேக் அப்துல்காதர், கொங்கராயகுறிச்சி ஜாகீர் உசேன், ஆழிகுடி துரைப்பாண்டியன், பக்கபட்டி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.