சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் ஜெர்மனி தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து “தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை இன்று (04.10.2019) காலை 10.30 மணியளவில் நடத்தின. கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மகாதேவன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ். த.இ.செ. பத்ஹுர் ரப்பானி அவர்கள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து ‘தொல்தமிழ்’ என்ற ஆய்வுக்கோவையை வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு. முஹம்மது சாதிக் மற்றும் அரசுதவிபெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ. அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ. மீரான் மைதீன், அல்ஹாஜ் எம்.கே.எம். முஹம்மது நாசர் மற்றும் பொறியாளர் எல்.கே.எம்.ஏ. முஹம்மது நவாப் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“தமிழின் தொன்மையே இன்று நம் தமிழைக் காக்கும் ஆயுதம்”: பாலச்சந்திரன் இ.ஆ.ப. பேச்சு
மேற்கு வங்க அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. (ஓய்வு) அவர்கள் நோக்கவுரையாற்றினார். அவர் தம் நோக்கவுரையில்,
“சுமேரியர், பாரசீகர்கள், எகிப்தியர்கள் ஆகியோரின் நாகரிகம் இன்று வழக்கொழிந்துவிட்டது. ஆனால் தமிழ் நாகரிகம் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது. சீனர்கள் தன் மொழியை முன்னிறுத்தி வாழ்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னே தமிழை முன்னிறுத்திப் பாவேந்தர் பாரதிதாசன் ஒற்றுமையாக்க நினைத்தார். தமிழ் வாழ நாம் வாழ வேண்டும், நாம் வாழ வேண்டுமென்றால் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும். இலக்கியம், கல்வெட்டு, அகழ்வாய்வு மூன்றும் ஒரு பண்பாட்டின் தொன்மை சொல்லும். இலக்கியம் மிகைப்படுத்தும். ஆனால் அகழ்வாய்வு பொய் சொல்லாது.
சிலம்பு உட்பட எந்த தமிழ் இலக்கியமும் ஆவணம்தான் எப்படிப்பட்ட அகழ்வாய்வுகள் நடந்தாலும் அந்த நாட்டின் இலக்கியத்தோடு இணைத்துப் பார்த்தால் மட்டுமே உண்மை கிடைக்கும். நமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான நம் மறுப்பு தெரிவிக்காமைக்கு நம் சோம்பேறித்தனம் காரணமாக இருக்கிறது. சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப சில அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் தாமதப்படுத்தலாம். நாம் விரும்புவதை நாம் சொல்வதை வரலாறாக மாற்ற முயலக் கூடாது; வெளிநாட்டு அத்தரவுகள் அறிஞர்களால் சரியாக்கப்படவேண்டும்.
கீழடியில் அசைக்க முடியாத ஆதாரங்களில் கிடைத்திருக்கின்றன. ஒரு கார்பன் மாதிரியைக் கொண்டு 2600 ஆண்டுகளுக்கு முன் என்று அழகாகச் சொல்கிறது தமிழகத் தொல்லியல் துறை அறிக்கை. கீழடிக்கு அடுத்து எங்கே ஆய்வு செல்லவேண்டும்? என்று கூறியிருக்கலாம். கி.மு. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மாங்குளம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. தமிழினம் தங்களுக்குள்ள இடம் பறிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் சார்ந்த பழம்பெருமை உடைய தமிழினத்தின் தொன்மையை யார் தடுக்க முடியும்? தமிழின் தொன்மையே இன்று நம் மொழியைக் காக்கும் ஆயுதம். ஊகங்கள் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் இல்லை. ஆனால் அது பல புதிய கோணத்தை நோக்கிக் கொண்டு செல்லலாம். நம் ஆய்வுகள் அறிவியல் முறைப்படியில் நடைபெற்றால் சங்ககாலப் பெருமையை நாம் அறியலாம். திருவள்ளுவரும் பாரதியும் வள்ளலாரும் நவீன பார்வையின் தொடர்ச்சி. பாரதி கடலையும், காகத்தையும் தன் உறவாகச் சொன்னார்.
தொல்காப்பியரின் ஐந்திணை சார்ந்த இலக்கணக் கோட்பாடு அற்புதமானது. உணர்வு சாராமல் மொழி அறிஞர்களின் உதவியோடு தமிழின் தொன்மை உறுதியாக நிறுவப்படும். ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என்று பாரதி பாடினார். ஐக்கிய நாடுகள் சபை வரை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கணியன் பூங்குன்றனாரின் கருத்து ஒலித்தது. இந்திக்குத் தரும் நிதியுதவி தமிழுக்கும் தரப்பட வேண்டும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு என்று பாரதி பாடினார்” என்று அவர் பேசினார்.
தொன்மைத் தமிழர் பண்பாட்டின் தொட்டில் ஆதிச்சநல்லூர்
ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் முனைவர் க. சுபாஷிணி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்புரையாற்றும்போது,
“தமிழர்களின் அடையாளமாகக் கீழடி அகழ்வாய்வு திகழ்கிறது. எத்தனையோ அகழ்வாய்வுகள் நடைபெற்றாலும் கீழடி பெரிதும் பேசப்படுவது நாம் பெற்ற பேறு. ஆதிச்சநல்லூரில் 1876 ஜோகர் என்கிற ஜெர்மானியர் செய்த ஆய்வில் மண்டையோடுகள் கிடைத்தன. அலெக்சாண்டர் ரியா 1904 – 1905 இல் தொடங்கி 1915இல் அறிக்கையாக வெளியிட்டார். திருமணத்திற்கு நாம் கட்டும் பட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் பெற்ற அகழ்வாய்வு கிடைத்தது. 2004-2005 இல் நடைபெற்ற அகழ்வாய்வு நடைபெற்றது. கி.மு. 1900க்கு ஆதிச்சநல்லூர் மண்டையோடுகளின் காலம் குறித்து ஆய்வாளர் சாத்தான்குளம் இரா. ராகவன் குறிப்பிட்டார். ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் எங்கே? ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் ஏன் சரியாகப் பராமரிக்கப்படவில்லை? கீழடியில் கிடைத்த எழுத்துகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என அறிகிறோம். ஜோகோர் எடுத்தது பெர்லினில் உள்ளது என்கிறார்கள். அங்கே 99 அருங்காட்சியகங்கள் உள்ளன.
இறுதியில் ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஏசியன் ஆர்ட்ஸ் அருங்காட்சியகத்தில் யார் கண்களுக்கும் தெரியாமல் பெட்டிக்குள் உள்ளன. அதை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் எனத் தமிழ் மரபு அறக்கட்டளை வேண்டுகோள் வைத்துள்ளது.
இங்குள்ள தொல்லியல் அறிஞரின் உதவியோடு அந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். வளமான நிலமாக ஆதிச்சநல்லூர் இருந்திருக்க வேண்டும். தமிழின் சங்க இலக்கியப் பின்னணியோடு மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வுகள் நடத்தப்படவேண்டும்.
இப்போது ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு நடந்தது ஈமக்கிரியை நடந்த இடம். மக்கள் வாழ்ந்த பகுதிகளில் அடுத்து அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழ் இனம், தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம். கட்டொழுங்கு மிக்க இக்கல்லூரி மாணவர்கள் நெல்லையில் பழமைவாய்ந்த பண்பாட்டை காக்க வேண்டும். ஆதிச்சநல்லூரில் அழகான அருங்காட்சியத்தை அமைக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.
மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்கள் ஆய்வுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அடுத்ததாக ஆய்வரங்க அமர்வுகள் தொடங்கின. இவ்வமர்வுகளுக்கு வரலாற்று ஆய்வாளர் திரு. செ. திவான் அவர்கள் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிகமேலாண்மைத்துறை தலைவர் முனைவர் நெல்லை கவிநேசன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.
சென்னை தொல்லியல் நூலாசிரியர் திரு. அமுதன் (எ) தனசேகரன், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை இசைத்துறை விரிவுரையாளர் முனைவர் சி. சூர்யகுமார், எழுத்தாளர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் ஆய்வுரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ச. தமிழினியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் ச. மகாதேவன், முனைவர் அ.மு. அயூப்கான், முனைவர் அ.சே. சேக் சிந்தா, பேரா. மு. சாதிக் அலி, முனைவர் இரா. அனுசுயா, முனைவர் ஜே. குமார், முனைவர் வி. மாலிக், முனைவர் மஜிதா பர்வின், முனைவர் செல்வ சுகன்யா, முனைவர் ஞா. அந்தோணி சுரேஷ், முனைவர் ச. தமிழினியன் ஆகியோர் செய்திருந்தனர்