தூத்துக்குடி மாவட்டம் கொற்கை பாண்டியனின் தலைநகரம். சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு துறைமுகமாக விளங்கிய அற்புதமான இடம். இவ்விடத்தில் தாமிரபரணி ஆற்றில் ஆத்தூர் – உமரிக்காடு இடையே அரண்மனை சுவடுகளாக தெரியவந்துள்ளது. இதை தொல்லியல் துறை ஆய்வுநடத்துமா என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே வங்கக்கடலில் கலக்கின்றது. இதற்கு சுமார் 6 கி.மீ. முன்னதாக ஆத்தூர் உள்ளது. ஆற்றின் குறுக்கே ஆத்தூர் &முக்காணி இடையே போக்குவரத்திற்காக இரண்டு பாலங்கள் உள்ளன.
இந்த பாலத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் மேற்கே வாழவல்லான் அருகே ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. குடிதண்ணீருக்காக கட்டப்பட்ட இந்த தடுப்பணையை தாண்டி தாமிரபரணி தண்ணீர் கடலுக்குள் செல்லவில்லை. இதேபோல் பாலத்தின் கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் சேர்ந்தபூமங்கலம் அருகே ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணியால் கடல் தண்ணீர் ஆற்றுக்குள் நுழையாமல் இருக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருகிறது. இதனால் கடல் தண்ணீரும் இந்த பகுதிக்குள் நுழையாமல் உள்ளது.
இந்த 2 தடுப்பணைகளுக்கும் இடைப்பட்ட சுமார் 5 கி.மீ. நீளமான ஆற்றின் பரப்பளவு நீரோட்டம் இன்றி என்றும் இல்லாத வகையில் வறண்டு போய்விட்டது. உமரிக்காடு ஊருக்கு அருகாமையில் ஆற்றுக்குள் பழங்கால கட்டிட அமைப்பு ஒன்று சிதிலமடைந்த நிலையில் கிடப்பது தெரியவந்துள்ளது. இதை கண்ட தினசரி பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கையில் போட்டிக்கொண்டு செய்தி வெளியிட, ஊடகங்களும் சிறப்பு செய்தி வெளியிட ஆதிச்சநல்லூர் சிவகளை ஆய்வை போல இவ்விடமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெள்ளை பாறாங்கற்கள் மற்றும் சதுரவடிவிலான சுட்ட செங்கற்களால் இந்த அமைப்பு கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் நடுவில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு உருக்குலைந்த நிலையில் பழங்கால வரலாற்றின் எச்சமாக கிடக்கிறது.
இதுபற்றி ஆறுமுகநேரியை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரான தவசி முத்து கூறியதாவது.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர்களின் ஆட்சியிலிருந்த கொற்கை பகுதி இப்போதைய காயல் பட்டினம், பழையகாயல், ஏரல் அருகேயுள்ள கொற்கை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. இதற்கான ஆதாரங்களாக இப்பகுதிகளில் இன்றளவும் பூமிக்கடியிலிருந்து தொன்மை நாணயங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன. இந்த வகையில் காயல்பட்டினத்தில் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அதில் 14&ம் நூற்றாண்டில் கொற்றை மன்னன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் பள்ளிவாசல் ஒன்றிற்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே கல்வெட்டில், ‘உத்தரதீரத்து உமரிக்காடு’ என்றும் குறிப்பு உள்ளது. இதற்கு வடநாட்டில் பெயரும் புகழும் பெற்ற உமரிக்காடு என்பது பொரு. அந்த வகையில் தற்போது ஆற்றுக்குள் கிடக்கும் கட்டிட அமைப்பானது கொற்கை துறைமுகப்பட்டினத்தின் நுழைவாயிலாகவும், காவல் அரணாகவும் இருந்திருக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே கடந்த 2003&ம் ஆண்டில் ஆறுமுகநேரியை அடுத்து உப்பளங்கள் சூழ்ந்த சிலாக்காடு பகுதியில் பூமிக்குள் இருந்து 4 அடி உயர ஐம்பொன் நடராஜர் சிலை மற்றும் சிவகாமி சிலை கிடைத்தது. சுமார் 700 ஆண்டு காலம் பழமையான அச்சிலைகள் தற்போது நெல்லையில் உள்ள தொல்லியல் துறை அருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சிலைகள் உள்ள பகுதியில் கோவிலிருந்தற்கான ஆதாரங்களும் ஒரு ஊரே பூமிக்கடியில் புதைந்து கிடப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து வருகின்றன. வித விதமான வடிவங்களில் கூரை ஓடுகளும், மண்பானை ஓடுகளும், சுட்ட செங்கற்களும், கிணறு வடிவத்திலான மண் உறைகளும் இன்றளவும் காண கிடைக்கின்றன. சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய தமிழாங நாகரிகத்தின் சுவடுகளாக இவை தெரிகின்றன.
இதற்கு இன்றைய ஆதாரங்களாக கப்பலோடிய கசம் (கப்பல் நங்கூரமிட்டு நின்ற இடம்), சல்லித்திரட்டு (முத்துச்சிப்பிகள் குவிக்கப்பட்ட இடம்) கொட்டமடங்கிய காடு, கீரனூர் (நக்கீரர் வாழ்ந்த இடம்), கோமான் புதூர் (அரசர்கள் தங்கிய இடம்) உள்ளிட்ட பகுதிகள் இருக்கின்றன.
இந்நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உயிரியல் தொழில் நுட்ப துறை தலைவரும், ஆத்தூரை சொந்த ஊராகவும் கொண்ட பேராசிரியர் சுதாகர் அவர் மாணவர்களுடன் ஆய்வு செய்தார். மேலும் இந்த பகுதியை பற்றி பல்வேறு குறிப்புகள் எடுத்துக்கொண்டார். இவர் கூறும் போது கடந்த 200 வருடங்களில் இந்த பகுதி வற்றி யாரும் பார்த்தில்லை என தனது தந்தையார் கூறியதாக பதிவிடுகிறார். இங்குள்ள செங்கல் வித்தியாசமாக இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இங்கு ஒரு பெண் தெய்வ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 3500 வருடங்களுக்கு முன்பு வரலாற்றை கூறுவது போல உள்ளது. கொற்கை துறைமுகம் இருந்த போது இவ்விடத்தில் பாண்டியனின் பெரிய அரண்மனை இருந்துள்ளது. குறிப்பாக உமரிகாடு அருகே அகழி காத்த சாமி கோயில் உள்ளது. எனவே ஆத்தூர், உமரிக்காடு இடையே பெரிய அரண்மனை அகழியோடு விளங்கியுள்ளது. இந்த அகழியை காத்த சாமி தான் இவர். மேலும் இவ்விடத்தில் இருந்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் கொற்கை துறை முகம் இருந்துள்ளது.
இதேபோல் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று அந்த தோரணவாயில் போன்ற அமைப்பை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
10 முதல் 15 அடி ஆழத்தில் தோரண வாயிலின் முழு அமைப்பும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அரச குடும்பத்தினர் குளிப்பதற்கான தனி அமைப்பு உள்ளதாகவும் செவி வழி செய்தி கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பாக புதையல் என நினைத்து அந்த பகுதியில் தோண்டியதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கூறப்படுகிறது-.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, இடை தமிழ் சங்கம் இருந்த இடமே இதுதான் என பட்டியலிடுகிறார்.
தமிழ் சங்கம் மூன்று என பட்டியலிடுகிறார்கள். முதல் சங்கம் லெமுரியா கண்டம், இரண்டாம் சங்கம் கபடபுரம் என்னும் கொற்கை, மூன்றாம் தமிழ் சங்கம் மதுரையாகும். இரண்டாம் சங்கத்தில் தான் பாண்டிய அரண்மனை தலைமை புலவர் நக்கீரர் இருந்துள்ளார். இவர் பெயரில் தான் ஆத்தூர் அருகே கீரனூர் அமைந்துள்ளது- அவர் ‘சங்கருப்பது எங்கள் குலம் சங்கரனாருக்கு ஏதுகுல’ என பாடியுள்ளார். ஆகவே இவர் சங்கருக்கும் குலத்தினை சார்ந்தவர். கொற்கையில் தான் சங்கு அறுக்கும் தொழில் நடந்து வந்துள்ளது. அதற்கு தற்போது தரையை சிறிது தோண்டினால் கூட சங்கு கிடைப்பதை நாம் காணலாம். மதுரைக்கும் சங்குக்கும் எந்த சம்பந்தம் இல்லை. ஆகவே இவரின் சொந்த ஊரான இரண்டாம் தமிழ்சங்கம் இருந்த ஊரான கொற்கையில் தான் இரண்டாம் தமிழ்சங்கம் என ஊர்ஜிதமாகிறது. அதோடு மட்டுமல்லாமல் பாண்டிய மன்னருக்கு செங்கோல் கொடுத்த சொங்கோல் மட ஆதினம் அருகில் உள்ள பெருங்குளத்தில் உள்ளது. அதன் அருகில் உள்ள திருவழுதிஈஸ்வரர் கோயிலில் திருவள்ளுவர் திருக்குறள் அறங்கேற்றிய இடம் உள்ளது. அதில் தற்போது அவர் சிலை காணப்படுகிறது. இரண்டாம் தமிழ்சங்கத்தில்தான் திருக்குறள் அரங்கேறியுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதிக்கு ஓலைச்சுவடி சேகரிக்க வந்த தமிழ் தாத்தா உவேசா அவர்கள் மிக அதிகமான பத்துபாட்டு, குறுந்தொகை போன்ற ஓலைச்சுவடிகளை இங்குதான் கண்டெடுத்துள்ளார். அதன்பிறகே அச்சு ஏற்றப்பட்டுள்ளது. புன்னகாயலில் தான் 16 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் முதல் அச்சுகூடம் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற பல தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
எனவே ஆற்றுக்குள் இருப்பது ஏதோ பாண்டியன் அரண்மனை என விட்டுவிடக்கூடாது, இரண்டாம் தமிழ் சங்கம் இருந்த இடம் என அதன் முக்கியத்துவம் குறித்து அகழாய்வு செய்ய வேண்டும்.
தமிழக மற்றும் மத்திய தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்தால் நாகரிகத்தின் உச்சத்திலிருந்த பழந்தமிழர்களின் மற்றுமொரு தாமிரபரணி ஆற்று நாகரிக தொட்டில் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்கள் கிடைக்க வரும். அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வருவதற்கு முன்னால் இந்த அகழாய்வை செய்ய ஆரம்பிக்க வேண்டும் என்பதே ஓட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
—-