செய்துங்கநல்லூர்அருகே உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர கிணற்றை மூட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்குமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர் அருகே ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான விட்டிலாபுரம் & மணக்கரை சாலை உள்ளது. இந்த சாலை வழியாக விட்டிலாபுரம், ஆழிகுடி, பொந்தன்பொழி, இந்திரா நகர், முத்தாலங்குறிச்சி உள்பட பல கிராமங்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 4 மிகப்பெரிய செங்கல் சூளை உள்பட பல தொழில்சாலைகளுக்கு தினமும் 50 க்கு மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகிறது. விட்டிலாபுரம், செய்துங்கநல்லூர் உள்பட பல ஊராட்சிகளுக்கும், கூடன் குளம் கூட்டு குடிதண்ணீர் திட்டத்திற்கும் இந்த சாலையின் அருகே தான் ராட்சத குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்கின்றனர். நீர் ஏற்று நிலையத்தினை பார்வையிட பல அதிகாரிகள் தினமும் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகிறார்கள். மேலும் தினமும் 16 சுற்றுகள் தனியார் மற்றும் அரசு பேருந்தும், சுமார் 6 கல்வி பேருந்துகளும் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கிறது. இச்சாலையில் விட்டிலாபுரம் ஊர் அருகே வயல் காட்டில் சாலை ஓரத்தில் கிணறு ஒன்று உள்ள புதிதாக வரும் பயணிகளுக்கு இந்த கிணறு தெரிய வாய்ப்பில்லை. எனவே இந்த இடத்தில் வரும் போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் தவறி உள்ளே விழுந்தால் பலர் உயிரிழக்க நேரிடும்.
இதுகுறித்து முத்தாலங்குறிச்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜ மணி கூறும் போது, உயிர் பலி வாங்க துடிக்கும் இந்த கிணற்றினை உடனே மூட வேண்டும். இந்த கிணற்றால் யாருக்கும் எந்தவொரு பயனும் இல்லை. கிணற்று அருகே தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட வில்லை. எனவே வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வந்தால், இந்த இடத்தில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக இந்த கிணற்றை மூடி தரவேண்டும் என்று அவர் கூறினார்.
உயிர் பலி வாங்க துடிக்கும் கிணற்றை உடனே மூட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.