சடைய னேரிக்கு தண்ணீர் தரும் வரத்து கால்வாய் அமலை செடி அடர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாத்தான்குளம் பகுதிக்கு தாமிபரணி உபரி தண்ணீரை கொண்டு செல்ல உருவாக்க ப்பட்ட திட்டம் சடையனேரி கால்வாய்திட்டம். முன்னாள் அமைச்சர் கே.பி.கே காலத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி நதியில் 7 வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டில் இருந்து மேலக்கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு சென்று கிளாக்குளம் என்னும் கிராமத்தில் கிளைக் கால்வாயாக சடையனேரி கால்வாயை பிரிக்கிறார்கள்.
இந்த கால்வாய் தண்ணீரை கால்வாய் குளத்தில் சேகரித்து அதன் பின் திருவரங்கப்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து சடையனேரிக்கு தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். இந்த கால்வாய் அகலமானதாக இல்லாத காரணத்தினால் 1996 ஆம் ஆண்டு அகலப்படுத்தப்பட்டது. இதற்காக அப்போதைய திமுக அரசு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலமாக மருதூர் மேலக்காலில் கூடுதல் மதகு வைத்து கால்வாய் குளம் வரை வரத்து கால்வாயை அகல படுத்தி தண்ணீர் கொடுத்தனர்.
அதே போலவே மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள சடையனேரி கால்வாயில் இருந்து தனிக்கால்வாய் அமைத்து கருமேனி ஆற்றை கடக்க வாய்க்கால் அமைத்து சுப்பராயபுரம், பொத்தக்காலன் விளை வழியாக புத்தன் தருவையில் தாமிரபரணி தண்ணீரை கொண்டு சேர்த்தனர். ஒரு தடவை புத்தன் தருவையை நிரப்பினால் அந்த பகுதியில் கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உப்பு தண்ணீராக மாறுவது தடுக்கப்படும். திட்டம் நிறைவேறி சில காலம் தாமிரபரணி தண்ணீர் இப்பகுதிக்கு போய் சேர்ந்தது.
அதன் பிறகு இந்த திட்டம் கடந்த 10 வருட காலமாக முறையாக செயல் படவில்லை. கிளாக்குளத்தில் இருந்து கால்வாய் குளம் வரை வரும் வரத்து கால்வாய் மிகவும் தூர்ந்து விட்டது. அமலை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. கரைகள் பழுதடைந்து விட்டது. சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெள்ளூர் கால்வாய்க்கு சென்று விடுகிறது.
இதுகுறித்து கால்வாய் கிராமத்தினை சேர்ந்த பொன் ரவி கூறும் போது, கிளாக்குளத்தில் இருந்து கால்வாய் குளம் வரை வரும் கால்வாய் மிக மோசமாக உள்ளது. அமலை செடி அடர்ந்து காணப்படும் காரணத்தினால் தண்ணீர் மிக அதிகமாக செல்ல முடியவில்லை. மணிமுத்தாறு கால்வாய் தண்ணீர் மற்றும் மழை தண்ணீர் செல்ல இந்த கால்வாயின் அடியில் அமைக்கப்பட்ட பாதாள ஓடை ஓட்டை விழுந்து விட்டது. இதனால் இந்த கால்வாயில் வரும் தண்ணீர் எல்லாம் வீணாக வெள்ளூர் கால்வாயில் போய் விழுகிறது. எனவே சடையனேரிகால்வாயில் ஓதுக்கீடு செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. கால்வாயை பராமரித்து அமலைசெடியை அகற்றி செம்மை படுத்தினால் மட்டுமே கால்வாய் குளத்தில் தண்ணீர் பெருக்க முடியும். மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் ஆற்று தண்ணீரை சடையனேரி மற்றும் புத்தன்தருவைக்கு திருப்பி விட இயலும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கூறினார்.
உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மழைகாலங்களில் தாமிரபரணி தண்ணீரை சடையனேரி மற்றும் புத்தன் தருவைக்கு திருப்ப முடியும் . பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?