1992 ஆண்டுகளில் நான் வல்ல நாடு பகுதியில் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய போது முறப்பநாட்டில் வைத்து சிற்றம்பலம் அவர்களைச் சந்தித்தேன். அதன் பிறகு அவரது நடவடிக்கை மூலமாக நண்பர் ஆனேன். எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பவர் சிற்றம்பலம். நான் 1998 ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றங்கரை குறித்து நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர் எழுதும் போது என்னைப் பாராட்டி ஊக்குவித்தவர். திருவாவடுதுறை ஆதினம் குறித்த விபரங்களை எனக்குத் தந்து உதவுவார் . அதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாள் கழித்து குறுக்குதுறை முருகன் கோயில் திருப்பணியின் போது என்னைக் கூட்டிச்சென்று அங்குள்ள அற்புதங்களைக் காட்டினார். குறிப்பாக மேலக் கோயிலில் உள்ள நிலவறைகளை எங்களுக்குக் காட்டினார்.அதோடு மட்டுமல்லாமல் என்னை திருவாவடுதுறை 23வது குருமகா சன்னிதானம் அவர்களிடம் குடும்பத்தோடு கூட்டிச்சென்றார் . முறப்பநாடு மடத்திலிருந்து சுவாமிகளிடம் இவர்தான் முத்தாலங்குறிச்சி காமராசு நிறைய எழுதுகிறார். நம்ம ஆதினம் குறித்ததும் எழுதியிருக்கிறார் என்று அறிமுகப்படுத்தினார். என்னை ஆசிர்வதித்த சுவாமி அதன் பிறகு என்னை அழைத்து விருது வழங்கி கௌரவித்தார்.
இதே போல் அரியப் பெரிய காரியங்களை எல்லாம் மிகவும் இலகுவாகச் செய்யும் அற்புத மனிதர் பாரதி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளசை அருணா அய்யாவிடம் என்னை அறிமுகப் படுத்தியதோடு அவர் தொகுத்த சிறுகதைத் தொகுப்பில் எனது சிறுகதை வெளிவரக் காரணமாக இருந்தார். இதுபோன்ற பல்வேறு காரியங்களைக் கூறலாம்.
தன் மகனுக்கு பாரதி மீது கொண்ட பற்றால் பாரதி எனப் பெயர் வைத்து இருக்கிறார். நெல்லையில் மிகப்பெரிய மனிதர்களால் அரியப்பட்ட சிற்றம்பலம் எங்கேயும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளமாட்டார். நல்ல செயல்களை எனக்கு மட்டுமல்ல பல்வேறு நபர்களுக்குச் செய்வதை நான் கண்ணுறப் பார்த்து இருக்கிறேன். தாமிரபரணி மகா புஷ்கரத்தின் போது கூட வேளாக் குறிச்சி ஆதினம் மூலமாக நான் முன்னிலைப் படுத்தும்போது அதைப் பார்த்து சந்தோசப்பட்டு, உங்களுக்கு மேலும் மேலும் உயர்வு இருக்கும் என்று பாசத்தோடு பாராட்டியவர். இன்று நான் உச்சத்தினை தொட முயன்றாலும், அன்று என் எழுத்து துறையில் அஸ்திபாரத்திற்கான செங்கற்களை எடுத்துத் தந்தவர்களில் நீங்களும் ஒருவர் மறுக்கமுடியுமா? நன்றி நண்பரே. அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு