செய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயிலுக்குப் பால்குடம் எடுத்த பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
செய்துங்கநல்லூர் திருவரங்க செல்வியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த கோயிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு நடந்து வந்தது. இதற்கிடையில் ஊர் மக்கள் சார்பாகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல் நாள் குடியழைப்பு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டது. அதன் பின் சாஸ்தா அழைப்பு நடந்தது. மறு நாள் காலையில் சிவன் கோயிலிலிருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் அக்கிரகாரம், பிரதானச்சாலை, வி.கோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. மாலை அம்மனுக்குக் கரகம் எடுத்து வருதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நடந்தது. இரவில் கொடைவிழா நடந்தது. புதன் கிழமை காலை படப்பு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் தேவர் சமுதாய திருவரங்க செல்வி அம்மன் கோயில் திருவிழா குழுவினர் செய்து இருந்தனர்.


