சாத்தான்குளத்தில் மனைவி வீட்டை விட்டு விரட்டியதால் செல்போன் டவர் மீது ஏறி கணவர் தற்கொலை மிரட்டல்… ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்ததால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த லிங்கதுரை என்பவருக்கும் அவரது மனைவி பானுமதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் லிங்கதுரை அவரது மனைவி பானுமதி வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து லிங்கதுரை மெய்ஞானபுரம் காவல் நிலையத்தில் தனது மனைவி வீட்டை விட்டு விரட்டுவதாக கூறி புகார் அளித்துள்ளார். இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் புலம்பி வந்த அவர் இன்று சாத்தான்குளம் வாரச்சந்தை அருகே உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்த லிங்கதுரையிடம் கீழே இறங்கி வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் தனது புகாருக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மறுத்து வருவதாகவும் அதனால் மனவேதனையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறினார். மேலும் இது போதாது என எண்ணி டவரில் உள்ள ஒரு கம்பியில் கயிற்றை கட்டி தூக்கில் தொங்க வேண்டும் என எண்ணி கயிறை கழுத்தில் மாட்டிக் கொண்டார். பின்னர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் செல்போன் டவர் மீது ஏறி நின்ற லிங்கதுரையிடம் உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றப்படும் எனக்கூறி உறுதி அளித்ததன் பேரில் அவர் கீழே இறங்க முற்பட்டார்.
அப்போது டவரில் நின்றுகொண்டிருந்த அவர் “சார் சார் சார் பயமா இருக்கு சார் என்னைய எப்படியாவது காப்பாத்துங்க சார்” என வடிவேலு பாணியில் சுட்டிக்குழந்தை போல அதிகாரிகளிடம் வியர்க்க விறுவிறுக்க மன்றாடினார்.
இதனால் அங்கு கூடி நின்ற பொதுமக்கள் “தம்பி கீழ இறங்குங்க எதுவானாலும் பேசிக்கலாம் என இறக்கப்பட்டு கூறிய பொதுமக்கள்” அனைவரும் தைரியமாக மேலே செல்போன் டவரில் ஏறிய லிங்கதுரை கீழே இறங்க பயப்பட்டதால் சிரித்தனர். மேலும் அந்த இடம் முழுவதும் சிரிப்பலையாய் காட்சியளித்தது. பின்னர் சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினர் டவரின் மீது ஏறி லிங்கதுரையை பத்திரமாக கீழே இறக்கி வந்தனர். பின்னர் போலீசார் அவரை தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி பானுமதி மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தான் அதிக பாசம் வைத்துள்ளதாகவும் கூறி அதனை உறுதிப்படுத்துவதற்காக நடிகர் சூர்யா நடித்த கஜினி பட பாணியில் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்தி வைத்திருப்பதாகவும் காவல்துறையினரிடம் திறந்து காட்டினார். மேலும் கீழே இறங்கிய லிங்கதுரையை காவல் துறையினர் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, மீண்டும் மெய்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று குடும்பத்தினருடன் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதாக தகவல் தெரிவித்தனர்.
சாத்தான்குளத்தில் தற்கொலை செய்வதற்காக வீராப்பாக செல்போன் டவர் மீது ஏறி விட்டு பின்னர் பயந்துபோய் கீழே இறங்க முடியாமல் தவித்த சம்பவம் பரபரப்பையும், சிரிப்பையும் உண்டாக்கியது.


