ஸ்ரீவைகுண்டம் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பலி.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நயினார் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மகன் பீர் ஷேக் அரபாத்(23).
இவர் நேற்று நண்பர்களுடன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் அனைவரும் வெட்டிகுளம் ரோட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் பீர் ஷேக் அரபாத் நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் கிணற்றில் மூழ்கியுள்ளார். உடனே அவரது நண்பர்கள் சேரகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில் போலிசார் வருகை தந்தனர். அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத்துறையினர் வந்து சுமார் 20 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து பீர் ஷேக் அரபாத் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


