தென்சிதம்பரம் என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோவிலில் மகா பிரம்மோட்ச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலை தென்சிதம்பரம் என்று அழைக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த இந்த சிவன் கோவிலில் ஆண்டுதோறும் மகா பிரம்மோட்ச திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன மகா பிரம்மோட்ச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக அதிகாலை சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் செங்கோல் ஆதிச 103 வது குரு மகாசன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்தார். அவரை பஞ்ச வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வரவேற்றனர். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதன்பின்னர் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தினமும் காலையும் மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலா எழுந்தருளும் நிகழ்ச்சியும் திருநடன தீபாராதனையும் நடைபெறும்.
வருகின்ற 30ம் காலை 6 மணிக்கு சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவை செய்து வருகின்றனர்.


