ஆதிச்சநல்லூர் சிவகளையில் அகழாய்வு பணி நிறைவு பெற்றது. ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டார்.
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர், தொல்லியல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தது. ஆதிச்சநல்லூர் ஆய்வு வரலாற்றில் முதல் முதலாக ஆதிச்சநல்லூர் ஆய்வில் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, தமிழர்களின் தொன்மையை வெளிபடுத்தும் அற்புத வாய்ப்பாக அமைந்துள்ளது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய புலங்கு பொருட்களான மண்பானைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட 21 வடிகால் குழாய்கள், தாயப்பொருட்கள், கூரைஓடுகள், சுடுமண் பொம்மைகள் வட்ட சில்கள், புகைப்பான்கள், கண்ணாடி மணிகள், இரும்பு கத்தி, யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள், சதுரங்ககாய் மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள், கீரல்கள், குறியீடுகள் என 500க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
செப்டம்பர் 30 ந்தேதியுடன் இந்த கட்ட ஆய்வு முடிந்தது. இதற்காக பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பணியை ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பார்வையிட்டார். ஆய்வு மாணவிகள் சோபனா, ரெக்ஷனா ஆகியோர் இந்த அகழாய்வு குறித்து அவருக்கு எடுத்து கூறினர். சிறு குழந்தைகள் புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழி, பெரியவர்களை புதைத்த முதுமக்கள் தாழி, முதுமக்கள் பயன்படுத்தி பொருள்கள், மற்றும் சுண்ணாம்பு உலை போன்ற அமைப்பு குறித்து விளக்கி கூறினர். அதன்பின் புளியங்குளம் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் படகு விடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தில் தண்ணீர் வசதி செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
அவருடன் எழுத்தாளர் நாறும்பூநாதர், முத்தாலங்குறிச்சி காமராசு, பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி கந்த சுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகளையில் தொல்லியல் இயக்குனர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் நடத்திய ஆய்வின் தற்போதைய கட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இங்கு தோண்டும் பணி நிறுத்தப்பட்டு விட்டது. இங்கிருந்து முதுமக்கள் தாழிகள் மற்றும் பொருள்கள் எடுக்கப்பட்டு, அது சம்பந்தப்பட்ட ஆவணப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மேலும் மூன்று மாதங்களுககு பிறகு ஆதிச்சநல்லூர், சிவகளை , தாமிரபரணி கரையில் உள்ள இடங்களிலும், கொற்கையிலும் ஆய்வு நடைபெறவுள்ளது. மே 25 அகழாய்வு ஆரம்பித்து ஆய்வு நடந்த மூன்று மாத்தில் முன்னேற்ற அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு விரைவில் தற்போது நடைபெற்ற அகழாய்வு அறிக்கையை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆதிச்சநல்லூர் அகாழ்ய்வு ஆர்வலர்கள் நம்பிகக்கையுடன் உள்ளனர்.


