கருங்குளம் வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தினை மானியத்துடன் பெற்றிட விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜனரஞ்சனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கருங்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக ‘நுண்ணீர் பாசனத்திட்டம் மற்றும் துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2020-21ம் ஆண்டிற்கு கருங்குளம் வட்டாரத்தில் 500ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் ஆகியவை சிறுகுறு விவசாயிகளுக்கு 100சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.
துணைநிலை நீர் மேலாண்மை பணிகள் திட்டத்தின் கீழ் 50சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25ஆயிரமும் அல்லது ஆயில் என்ஜின் வாங்குவதற்கு ரூ.15ஆயிரமும், பைப்லைன் அமைக்க ரூ.10ஆயிரமும், தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.40ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.90ஆயிரம் வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
துணைநிலை நீர் மேலாண் பணிகள் திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன திட்ட பயனாளிகள் மட்டுமே இணைய முடியும். எனவே மேற்கண்ட திட்டங்களில் பயன்அடைய விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், ரேசன் கார்டு நகல், கணினி பட்டா, நிலவரைபடம் மற்றும் வருவாய்த்துறை மூலமாக பெறப்பட்டுள்ள சிறுகுறு விவசாயி சான்றுடன் கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலர்கள் முரளிராஜன்-96299 54123, மாரிமுத்து-80152 15029, பிரேம்குமார்-96593 59468 என்ற எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.


