ஆதிச்சநல்லூர் கடந்த 25 ந்தேதி அகழாய்வு ஆரம்பமானது. துணை இயக்குநர் சிவானந்தம் அகழாய்வைத் துவக்கி வைத்தார். இங்கு தொல்லியல் கள இயக்குநர் பாஸ்கரன் தலைமையில் லோகநாதன் மற்றும் தொல்லியல் மாணவர்கள் தொழிலாளர்கள் மூலம் பணிநடந்து வருகிறது. காலை 8.30மணி முதல் மாலை 6 மணி வரை பணி நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் இரண்டு இடத்தில் சுமார் 10 செமீ வரை குழி தோண்டப்பட்டு தொல்லியல் பொருளைத் தேடும் பணியில் அகழாய்வாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வுப் பணியை பல்வேறு இடத்திலிருந்து ஆர்வலர் காணும் ஆர்வத்துடன் உள்ளனர். கடந்த 2004 மற்றும் 2005 ல் மத்திய அரசு அகழாய்வு செய்யும் போது பொதுமக்கள் , கல்லூரி மாணவர்கள் உள்பட யாரையும் இங்கே பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மாநில அரசு கீழடியில் அகழாய்வு செய்யும் போது பல்வேறு ஆர்வலர்கள் தொல்லியல் களத்தினை பார்வையிட வந்து சென்றனர். தற்போது மாநில தொல்லியல் துறையினர், அதுவும் கீழடியில் பணியாற்றியவர்கள் இங்கு பணியாற்றி வருகிறார்கள். மாநில அரசும் தொல்லியல் ஆர்வம் கல்லூரி மாணவர்களுக்கு வர வேண்டும் என ஆர்வத்தில் உள்ளனர். எனவே இங்கும் ஆர்வலர் கள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
இதற்கிடையில் நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன், நெல்லை சப் கலெகடர் முனீஸ், பயிற்சி சப் கலெக்டர்கள் சிவகுரு பிரபாகரன், அலமேலுமங்கை உள்பட முக்கிய பிரமுகர்கள் பார்வையிட வந்தனர். அவர்களுக்கு தொல்லியல் துறை கள இயக்குநர் பாஸ்கரன் விளக்கம் அளித்தார். தற்போது குழிகள் தோண்டப்பட்டு வரும் விதம், அதற்காகப் பயன்படுத்தும் கருவி, இந்த குழிகளில் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு என்ன, இந்த களத்தின் தன்மை உள்பட பல்வேறு கேள்விகளுக்குக் கள இயக்குநர் பாஸ்கரன் விளக்கம் அளித்தார்.
அதன் பின் பயிற்சி கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறும்போது, ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கு அகழாய்வு கடந்த திங்கள் கிழமை துவங்கியது . கள ஆய்வு துவங்கும் முன்பு இந்த களம் எப்படி இருந்தது என்பதை அறிய ஆவலாய் இருந்தோம். எனவே இன்று இதைப் பார்வையிட வந்தோம். ஆய்வாளர்கள் மிக உற்சாகமாகச் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து ஆய்வு செய்து சிறப்பாகத் தமிழக நாகரீகம் குறித்துப் பதிவிடுவார்கள். என அவர் கூறினார்.
அவருடன் தொல்லியல் துறை லோகநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சங்கர் கணேஷ், ஆதிச்சநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சிவா உள்படப் பலர் வந்தனர்.