ஆழ்வார்திருநகரியில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தூத்துக்குடி, நாசரேத் திருமண்டலத்திற்கு கீழ் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ளது. 4 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 32 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி கட்டிடத்தின் மேல்கூரை ஓட்டினால் கட்டப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5 வகுப்புகள் ஒரு கட்டிடமாகவும், 6 ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஒரு கட்டிடமாகவும் இரண்டு கட்டிடங்களாக உள்ளது. இன்று மதியம் 2.30 மணியளவில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புவரை உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியின் மேல் கூரை திடிரென இடிந்து விழுந்ததில் 4 ம் வகுப்பு மாணவி கலைச்செல்வி, 2ம் வகுப்பு மாணவன் ஆறுமுகம், மற்றும், ஆசிரியர் பார்வதி உட்பட 3 பேர்கள் காயமடைந்தனர். மற்ற மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் ஆழ்வார்திருநகரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டனர்.
பின்னர் மாணவன் ஆறுமுகம், மாணவி கலைச்செல்வி மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை வட்டார கல்வி அலுவலர் ரோஸ்லின் ராஜம்மாள் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு முறையும் இந்த பள்ளியை ஆய்வு செய்த போது பழுதடைந்த கட்டிடத்தை சரி செய்யுமாறு தெரிவித்தேன். மேலும் பள்ளி சார்பாக நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் இதுகுறித்தும் தெரிவித்தேன். ஆனால் இதுவரை அந்த கட்டிடத்தினை சீரமைக்க தவறி விட்டனர். மேலும் காயமடைந்த ஆசிரியை பார்வதியை தான் பார்த்ததும் இல்லை எனவும் மேலும் இவரை பள்ளி நிர்வாகம் சார்பில் நியமித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் திருச்செந்தூர் வட்டாச்சியர் மற்றும் ஆர்.டி.ஓ. சம்பவ இடத்தினை நேரில் பார்வையிட வந்தனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி வளாகத்தினை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதற்காக அரசு அதிகாரிகள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தெருவில் நின்றனர். தொடர்ந்து அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.


