தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் நெல் அறுவடை நடந்து வருகிறது. வருடம் தோறும் இந்த பகுதியில் விலையும் நெல்லை கொள்முதல் செய்வதற்காக 2 மாதங்கள் அரசு கொள்முதல் நிலையம் அமைப்பது வழக்கம். அதற்காக பேய்க்குளத்தில் இருந்து விராக்குளம் செல்லும் சாலையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில் நெல்லை விற்று பயன் பெறுவார்கள்.
அதே போல் இந்த வருடமும் மாவட்டத்தில் பல பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் கடந்த 20 தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேய்க்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலையம் இன்று வரை திறக்கப்படவில்லை.
தற்போது 150 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு அரசு கொள்முதல் நிலையத்தில் 2400 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் கொள்முதல் இல்லாத இடங்களில் 1500 முதல் 1700 வரை மட்டுமே வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாத விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வியாபாரிகளிடமே குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே வருடம் தோறும் நெல் அறுவடையொட்டி திறக்கும் நெல் கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


